தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவாரின் 4 தலைமுறைகள் வந்தாலும் அரசியலமைப்பு சட்டப் பிரிவு 370-ஐ திரும்பக் கொண்டுவர முடியாது என மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா சவால் விடுத்தார்.
மகாராஷ்டிர சட்டப் பேரவைத் தேர்தலையொட்டி, ஷிராலாவில் பிரசாரம் மேற்கொண்ட அவர், காஷ்மீர் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதி அல்ல என வலியுறுத்தி, ஜம்மு-காஷ்மீர் சட்டப் பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டதாகவும், சரத் பவாரின் 4 தலைமுறை வந்தாலும் அந்தப் பிரிவை மீட்டெடுக்க அனுமதிக்க மாட்டோம் என்றும் சூளுரைத்தார்.
காங்கிரஸ் கொண்டுவந்த வக்ஃபு வாரிய சட்டத் திருத்தத்தால் ஒட்டுமொத்த தேசமும் அதிருப்தியில் இருப்பதாக கூறிய அவர், கர்நாடகத்தில் கோயில் உள்பட ஒரு கிராமமே வக்ஃபு சொத்தாக அறிவிக்கப்பட்டதாக குற்றம்சாட்டினார்.
மகாராஷ்டிரத்தில் மகா விகாஸ் அகாடி கூட்டணி ஆட்சிக்கு வந்தால், நாளைக்கு விவசாயிகளின் நிலத்தையும் வக்ஃபு சொத்தாக அறிவித்து விடுவர் எனவும் அமித் ஷா குறிப்பிட்டார்.