உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட் பணி ஓய்வு பெற்றார்.
உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக கடந்த 2022-ஆம் ஆண்டு நவம்பர் 8-இல் டி.ஒய். சந்திரசூட் பதவியேற்றார். 65 வயதை எட்டிய அவர், வரும் 10-ஆம் தேதியுடன் ஓய்வு பெறவிருந்த நிலையில், வாரத்தின் கடைசி வேலை நாளில் பணியிலிருந்து தன்னை விடுவித்துக் கொண்டார்.
இதையொட்டி, உச்சநீதிமன்ற வழக்கறிஞர்கள் சார்பில் சந்திரசூட்டுக்கு பணி நிறைவு பாராட்டு விழா நடத்தப்பட்டது. இதில் அபிஷேக் மனு சிங்வி, கபில் சிபல் உள்ளிட்ட மூத்த வழக்கறிஞர்கள் பங்கேற்று சந்திரசூட்டுக்கு வாழ்த்து தெரிவித்தனர்.
தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட் பதவிக் காலத்தில் தேர்தல் நிதி பத்திர விவகாரம், தனிநபர் சொத்துரிமை, டெல்லி அரசுக்கும் துணைநிலை ஆளுநருக்கும் இடையிலான மோதல் போக்கு உள்ளிட்ட முக்கியத்துவம் வாய்ந்த விவகாரங்களுக்கு தீர்வு காணப்பட்டது.
இதுதவிர அயோத்தி ராமர் கோயில் பிரச்னை, சபரிமலைக்கு பெண்களுக்கு அனுமதி மறுப்பு உள்ளிட்ட சர்ச்சைக்குரிய விவகாரம் சார்ந்த வழக்கில் தீர்ப்பளித்த அமர்விலும் சந்திரசூட் அங்கம் வகித்தது குறிப்பிடத்தக்கது.