திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் திருக்கல்யாண வைபவம் கோலாகலமாக நடைபெற்றது.
முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் நடைபெறும் பல்வேறு விழாக்களில் முக்கிய விழாவான கந்த சஷ்டி விழா கடந்த 2-ம் தேதி தொடங்கியது. முருக பக்தர்கள் ஏராளமானோர் ஆறு நாள் சஷ்டி விரதம் மேற்கொண்டனர்.
மேலும், விழாவின் சிகர நிகழ்ச்சியான சூரசம்ஹாரமும் நடைபெற்றது. இதனைதொடர்ந்து கந்த சஷ்டி திருவிழாவின் ஏழாம் நாளன்று திருக்கல்யாண வைபவம் வெகு விமரிசையாக நடைபெற்றது.
திருக்கல்யாண வைபவத்தை காண்பதற்காக பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் குவிந்தனர். அனைவரும் பக்தி பரவசத்துடன் திருக்கல்யாணத்தை தரிசனம் செய்தனர்.ர். மேலும், பாதுகாப்பு பணிக்காக ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர்.
இதேபோல் நாகை சிக்கலில் அமைந்துள்ள சிங்காரவேலர் கோயிலில் திருக்கல்யாண வைபவம் நடைபெற்றது. திருமண அலங்காரத்தில் எழுந்தருளிய சுவாமி மேள தாளம் முழங்க தெய்வானைக்கு தாலி கட்டும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபட்டனர்.
இதேபோல் ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் பத்ரகாளியம்மன் கோயில் சுப்பிரமணியருக்கு திருக்கல்யாண வைபவம் விமரிசையாக நடைபெற்றது.