ஆணாதிக்கம் என்பது பெண்கள் விரும்பியதை அடைவதை தடுக்கிறது என்றால், இந்திரா காந்தி எப்படி நாட்டின் பிரதமராக முடிந்தது என மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கேள்வி எழுப்பியுள்ளார்.
கர்நாடக மாநிலம் பெங்களூருவில் உள்ள சிஎம்எஸ் வணிக கல்லூரியில் நிகழ்ச்சி ஒன்று நடைபெற்றது. இதில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கலந்து கொண்டார். அப்போது மாணவர்களுடன் கலந்துரையாடிய அவர், பெண்கள் விரும்பியதை ஆணாதிக்கம் தடுத்தால், பிறகு இந்திரா காந்தி நாட்டின் பிரதமராக எப்படி ஆனார் என கேள்வி எழுப்பியுள்ளார்.
ஆணாதிக்கம் பெண்களை தடுக்காது என்றும், முக்கியமாக இந்தியா போன்ற நாட்டில் அது போன்ற ஒன்று நடக்கவே நடக்காது எனவும் கூறியுள்ளார். ஆணாதிக்கம், சுதந்திர போராட்ட வீரர்களான அருணா ஆசாப் அலி, சரோஜினி நாயுடு உள்ளிட்டவர்களையும் தடுக்கவில்லை எனவும் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் சுட்டி காட்டியுள்ளார்.
ஆணாதிக்கம் என்பது இடதுசாரிகள் கண்டுபிடித்த கருத்து என்றும், பெண்கள் தர்க்க ரீதியாகவும், தன்னம்பிக்கையுடன் இருக்க வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.