திருவள்ளூர் அருகே தமிழக இளைஞருக்கும், லித்துவேனியா நாட்டு இளம் பெண்ணுக்கும் உறவினர்கள் முன்னிலையில் தமிழர் கலாச்சார முறைப்படி திருமணம் நடைபெற்றது.
திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டையைச் சேர்ந்த விலங்குகள் நல ஆர்வலரான சூர்யகுமார், முதுகலை பட்டம் படிக்க லித்துவேனியா நாட்டிற்குச் சென்றுள்ளார். அப்போது தன்னுடன் படித்த லித்துவேனியா நாட்டைச் சேர்ந்த பிரெஞ்சு மொழி ஆசிரியரான கமிலே டெக்னேன்கைட் என்ற இளம்பெண்ணுடன் சூரியகுமாருக்கு காதல் மலர்ந்துள்ளது.
அதனைத் தொடர்ந்து இருவீட்டார் சம்மதத்துடன் லித்துவேனியா நாட்டில் வைத்து, இருவருக்கும் கிறிஸ்தவ முறைப்படி திருமணம் நடைபெற்றது. தொடர்ந்து, தமிழர் கலாச்சாரப்படி திருமணம் நடத்த வேண்டும் என்ற பெண் வீட்டாரின் ஆர்வத்தால், இன்று காலை ஊத்துக்கோட்டையில் உள்ள வழிபாட்டு தலத்தில் உறவினர்கள் முன்னிலையில் இருவருக்கும் தமிழர் கலாச்சாரப்படி திருமணம் நடைபெற்றது.
இந்தியாவிற்கு வர வேண்டும் என்ற நீண்டநாள் ஆசை இந்த திருமணத்தின் மூலம் நிறைவடைந்துள்ளதாகவும், தமிழர்களின் அன்பும், அரவணைப்பும் தங்களை மிகவும் மகிழ்ச்சியடையச் செய்துள்ளதாகவும் லித்துவேனியா நாட்டினர் தெரிவித்தனர். தமிழரின் உணவும், கலாச்சாரமும் தங்களுக்கு மிகவும் பிடித்திருப்பதாகவும் அவர்கள் கூறினர்.