சென்னையில் மருத்துவ கல்லூரி விடுதி கட்டடம் இடிந்து விழுந்ததில், மூன்று பேர் காயமடைந்தனர்.
பாரிமுனை பேருந்து நிலையம் அருகே சென்னை மருத்துவ கல்லூரியின் பழைய விடுதிக் கட்டடம் அமைந்துள்ளது. பயன்பாட்டில் இல்லாத அந்த விடுதி கட்டத்தை இடித்துவிட்டு அங்கு நீதிமன்ற வளாகம் கட்டுவதற்காக பணிகள் துவங்கி நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில், இன்று காலை கட்டடத்தின் ஒரு பகுதி திடீரென இடிந்து விழுந்தது. இந்த விபத்தில் வழிப்போக்கர் ஒருவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. வடமாநில தொழிலாளிகள் இருவரும் காயமடைந்தனர்.
இந்த நிலையில் சம்பவ இடத்தை தொகுதி சட்டமன்ற உறுப்பினரும், அறநிலையத்துறை அமைச்சருமான சேகர் பாபு நேரில் ஆய்வு செய்தார். அப்போது அவரை சூழ்ந்த அப்பகுதி மக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த சேகர் பாபு, எதிர்பாராத விதமாக விடுதி கட்டடம் இடிந்து விழுந்த விபத்தில் வழிப்போக்கர் ஒருவருக்கு தலையில் காயம் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
மேலும், இரு வடமாநில தொழிலாளர்கள் சிறு காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று திரும்பியுள்ளதாகவும் அவர் கூறினார். காயமடைந்தவர்களுக்கு அரசு சார்பில் உரிய நிவாரணம் வழங்கப்படும் என தெரிவித்த அமைச்சர், பணி நடப்பது அனைவருக்கும் தெரியும் என்றபோது முன்னறிவிப்புகள் அவசியமற்றது என அலட்சியமாக பதிலளித்தார்.