மதுரை வைகையாற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால், சர்வீஸ் சாலை மூழ்கியது. இதனால் கோரிப்பாளையம் முதல் சிம்மக்கல் வரை பிரதான சாலையில் கடும் போக்குவரத்து நெரிசலில் ஏற்பட்டது.
ராமநாதபுரம் மாவட்ட பாசன தேவைக்காக தேனி மாவட்டம் வைகை அணையிலிருந்து 3 ஆயிரத்து 159 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டதால், வைகை ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது.
இதனால் மதுரை யானைக்கல் தரைப்பாலத்தை ஒட்டிய சர்வீஸ் சாலைகளில் வெள்ளநீர் சூழ்ந்துள்ளதால் வைகை கரை சாலை முதல் தத்தனேரி செல்லும் சர்வீஸ் சாலையில் போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டது.
இதன் காரணமாக, கோரிப்பாளையம் முதல் சிம்மக்கல் வரை பிரதான சாலைகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. மேலும், வைகை ஆற்றில், குளிக்கவும், துணி துவைக்கவும் கூடாது என ஒலிபெருக்கி மூலமாக பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.