கொடைக்கானலில் பிளாஸ்டிக் பாட்டில்கள் பறிமுதல் செய்யப்படுவதால் அதிருப்தியடைந்த சுற்றுலா பயணிகள், சுங்கச்சாவடி ஊழியர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
மலைகளில் இளவரசி என அழைக்கப்படும் கொடைக்கானலுக்கு தினந்தோறும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வருகை தருகின்றனர். இந்நிலையில், கொடைக்கானலில் 5 லிட்டருக்கு குறைவாக உள்ள பிளாஸ்டிக் பாட்டில்கள் மற்றும் பிளாஸ்டிக் பைகளை பயன்படுத்த தடை விதித்த உயர்நீதிமன்றம், உத்தரவை மீறி அவற்றை பயன்படுத்துவோரிடம் பாட்டில் ஒன்றுக்கு 20 ரூபாய் அபராதம் வசூலிக்க உத்தரவிட்டது.
இதையடுத்து சுங்கச்சாவடியில் தீவிர சோதனையில் ஈடுபடும் ஊழியர்கள், தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை கொண்டுவரும் சுற்றுலா பயணிகளுக்கு அபராதம் விதித்து அவற்றை பறிமுதல் செய்து வருகின்றனர்.
இதனால் அதிருப்தியடைந்த சுற்றுலா பயணிகள், சுங்கச்சாவடி ஊழியர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். கொடைக்கானலில் பிளாஸ்டிக் தடை செய்யப்பட்டது தொடர்பாக சுற்றுலா பயணிகளுக்கு போதிய விழிப்புணர்வு இல்லாத நிலையில், பிளாஸ்டிக் தடை தொடர்பாக ஆங்காங்கே அறிவிப்பு பதாகைகள் அமைக்கவேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.