வயநாடு வெள்ளத்தால் பாதிக்கப்ட்டவர்களுக்கு நிதியுதவி அளிப்பதாக பிரியாணி திருவிழா நடத்தி பண வசூல் நடத்தி மோசடியில் ஈடுபட்டதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த 3 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதிகளில் ஒவ்வொரு வருடமும் நிலச்சரிவுகள், பெருவெள்ளம் போன்ற பேரிடர்கள் ஏற்படுவது வழக்கமான ஒன்றாக மாறியுள்ளது. குறிப்பாக கேரள மாநிலத்தின் இடுக்கி, வயநாடு போன்ற மாவட்டங்கள் அதிகமாக பாதிக்கப்படுகின்றன.
கடந்த ஜூலை மாதம் 30 ஆம் தேதி வயநாடு மாவட்டத்தின் மேப்பாடி, சூரல்மலை, முண்டகை, அட்டமலை உள்ளிட்ட பகுதிகள் தொடர்மழை மற்றும் நிலச்சரிவுகடுமையாக பாதிக்கப்பட்டன.
அங்குள்ள வீடுகள், கடைகள், பள்ளிகள் உள்ளிட்ட கட்டடங்கள் சில நொடிகளில் மண்ணுக்குள் புதைந்து போயின. இதுவரை நூற்றுக்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.
இந்நிலையில், வயநாடு வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்காக ஆலப்புழாவில் பிரியாணி போட்டி நடத்தி பணம் பறித்த வழக்கில் கிளை செயலாளர் உட்பட 3 சிபிஎம் கட்சியினர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
நிவாரணத்திற்காக வசூலிக்கப்பட்ட பணம் அரசுக்கு வழங்கப்படவில்லை என முதல்வர் மற்றும் டிஜிபிக்கு வந்த புகாரின் அடிப்படையில் 3 பேர் மீதும் வழக்கு தொடரப்பட்டுள்ளது. குற்றம் சாட்டப்பட்டவர்கள் கூகுள் பே மூலமாகவும் பணம் வசூலித்துள்ளனர்.