இந்தியாவில் முதல் முறையாக அனைவருக்கும் இலவசமாக கிடைக்கும் புதிய பிஎஸ்என்எல் லைவ் டிவி சேவையை BSNL அறிமுகம் செய்துள்ளது. அதுவும், இந்தியாவிலேயே முதன் முதலில் தமிழகத்தில் இந்த பிஎஸ்என்எல் லைவ் டிவி சேவை தொடங்க வெள்ளோட்டம் நடைபெற்று வருகிறது. இது பற்றிய ஒரு செய்தி தொகுப்பு.
நாட்டின் எல்லா பகுதிகளிலும் பாதுகாப்பான, மலிவான மற்றும் நம்பகமான தொலை தொடர்பு சேவைகளை வழங்குவதில் புதுப்பிக்கப்பட்ட தனிக் கவனத்தை BSNL நிறுவனம் செலுத்தி வருகிறது.
இந்தியாவின் முதல் 5G நெட்வொர்க்கை அறிமுகப்படுத்துவது முதல் வலுவான இன்ட்ராநெட் ஃபைபர் லைவ் டிவி வரை, புதிய அவதாரம் எடுத்திருக்கும் BSNL , இந்திய தொலை தொடர்பு சந்தையில் முன்னணியில் உள்ளது. பிஎஸ்என்எல்லின் அனைத்து சேவைகளும், இந்தியாவுக்காக இந்தியாவில் தயாரிக்கப்பட்டதாகும்.
வாடிக்கையாளர்களுக்கு தடையற்ற மற்றும் பாதுகாப்பான நெட்வொர்க்கை வழங்குவதற்காக, ஃபிஷிங் முயற்சிகள் மற்றும் தீங்கிழைக்கும் எஸ்எம்எஸ் தானாகவே வடிகட்டப்படும் ( SPAM ) ஸ்பேம் இல்லாத நெட்வொர்க், NATIONAL WIFI ROAMING , IFTV, Any Time SIM (ATS) Kiosks, Direct-to-Device Service, Public Protection and Disaster Relief, மற்றும் First Private 5G என்ற ஏழு புதிய முயற்சிகளை BSNL அறிமுகப்படுத்தி இருக்கிறது.
இந்த வரிசையில் இப்போது, BSNL லைவ் டிவி சேவை பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இன்டர்நெட் இல்லாமலேயே ஃபைபர்-டு-தி-ஹோம் -எப்டிடிஎச் (Fiber to the Home – FTTH) சேவை மூலம் லைவ் டிவி சேனல்களை BSNL தொடங்கி இருக்கிறது. இந்தியாவிலேயே முதன்முறையாக, தொடங்கப் பட்டிருக்கும் இந்த BSNL லைவ் டிவி சேவை முதன்முறையாக தமிழகத்தில் பரிசோதனை முறையில் தொடங்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் இதுபோன்ற முதல் சேவை இது மட்டுமே என்பது குறிப்பிடத்தக்கது. இதன் சோதனை மத்தியப் பிரதேசத்திலும் தொடங்கப்பட்டுள்ளது. இந்தியாவின் முன்னணி தொழிலதிபரான முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோ டிவி ப்ளஸ், லைவ் டிவி சேனல்களை வழங்கி வருகிறது. ஆனால் அதற்கும் BSNL லைவ் டிவி சேவைக்கும் பெரிய வித்தியாசம் உள்ளது.
வாடிக்கையாளர்களிடம் இணைய வசதி இருந்தால் மட்டுமே ரிலையன்ஸ் ஜியோ டிவி ப்ளஸ் சேவையைப் பயன்படுத்த முடியும். இணைய வசதி இல்லை என்றால் ஜியோ டிவி ப்ளஸ் சேவை வாடிக்கையாளருக்கு கிடைக்காது.
ஆனால், இந்த பிஎஸ்என்எல் லைவ் டிவி சேவை மூலம் இன்டர்நெட் இல்லாமலும் டிவி சேவைகளை பெறமுடியும். அதாவது, பிஎஸ்என்எல் ஃபைபர்-டு-தி-ஹோம் சேவை பெற்றுவரும் வாடிக்கையாளர்களுக்கு கூடுதலாக இந்த லைவ் டிவி சேவையை பிஎஸ்என்எல் வழங்குகிறது.
இதனால், ஃபைபர் மூலம் இன்டர்நெட் சேவை முடிந்துவிட்டாலும் கூட, தொடர்ந்து லைவ் டிவி சேனல்களைப் பார்க்க முடியும். INTERNET மூலம் டிவி சேனல்களைப் பார்க்கும்போது, ஸ்ட்ரீமிங் ஸ்பீடில் இடையூறுகள் ,சிக்கல்கள் ஏற்படும். ஆனால், BSNL லைவ் டிவி சேவை ஸ்ட்ரீமிங் வேகம் குறைய வாய்ப்பே இல்லை என்று கூறப்பட்டுள்ளது. எந்தவித குறையும் இல்லாமல், லைவ் டிவி சேவைகளை BSNL இலவசமாக வழங்குகிறது.
500க்கும் மேற்பட்ட நேரடி தொலைக்காட்சி சேனல்களுடன், VOD (வீடியோ ஆன் டிமாண்ட்) சேவையும் BSNL லைவ் டிவி யில் உண்டு என்று கூறப்பட்டுள்ளது. இலவச டிவி சேனல்கள் உள்ளடக்கிய இந்த சேவையை பிஎஸ்என்எல் எப்டிடிஎச் வாடிக்கையாளர்கள் Android 10 அல்லது அதற்கு மேலான OS உள்ள ஸ்மார்ட் டிவியில் பெறலாம் என்றும், கூகுள் ப்ளே ஸ்டோரில் BSNL புதிய ஆப் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
பிஎஸ்என்எல் நிறுவனத்தின் FTTH எப்டிடிஎச் சேவை உள்ள வாடிக்கையாளர்கள் கூடுதலாக இந்த புதிய சேவையைப் பெற்று கொள்ளலாம் என்றும், டிவி சேனல்களுக்கு எந்தவித கட்டணமும் கிடையாது என்றும் பிஎஸ்என்எல் நிறுவனம் தெரிவித்துள்ளது.
தமிழ்நாடு மற்றும் மத்திய பிரதேசத்தில் இருக்கும் வாடிக்கையாளர்களுக்கு ஏற்கனவே தொடங்கப்பட்ட பரிச்சார்த்த சோதனை முடிந்த பிறகு சேவைகள் வழங்கப்படவுள்ளது. இதை வர்த்தக ரீதியாகவும் வழங்க பிஎஸ்என்எல் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. பாரம்பரிய DTH மற்றும் கேபிள் டிவிக்கு மாற்றாக அமைந்திருக்கும் BSNL லைவ் டிவி சேவைக்கு மக்களிடம் நல்ல வரவேற்பு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.