அமெரிக்க அதிபர் ஜோ பைடனும், சமீபத்தில் நடைபெற்ற தேர்தல் மூலம் புதிய அதிபராக தேர்வு செய்யப்பட்டுள்ள டொனால்ட் டிரம்பும் ஒருவரை ஒருவர் சந்தித்துக் கொண்டனர்.
அமெரிக்க அதிபர் தேர்தல் கடந்த 5-ம் தேதி நடைபெற்றது. இதில் உடனடியாக வாக்குகள் எண்ணப்பட்டன. இத்தேர்தலில், ஜனநாயக கட்சி சார்பில் போட்டியிட்ட துணை அதிபர் கமலா ஹாரிசை, குடியரசு கட்சி வேட்பாளர் டொனால்டு டிரம்ப் வென்றார். குடியரசு கட்சி 312 இடங்களிலும், ஜனநாயக கட்சி 226 தொகுதிகளிலும் வெற்றி பெற்றது.
இந்தச் சந்திப்பு வெள்ளை மாளிகையில் உள்ள ஓவல் அலுவலகத்தில் நடந்தது. அந்த சமயத்தில் அதிபர் ஜோ பைடன், டிரம்புக்கு விருந்து அளித்து கவுரவித்தார். பின்னர் அதிகார மாற்றம் சுமூகமாகவும் அமைதியான முறையிலும் நடப்பது உறுதி செய்ய அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்படும் என ஜோ பைடன் உறுதி அளித்தார்.
அதிபர் தேர்தலில் வெற்றி பெற்றதற்காக வெள்ளை மாளிகையில் வந்து சந்திக்குமாறு அதிபர் ஜோ பைடன் அழைப்பு விடுத்திருந்ததன் பேரில் இந்த சந்திப்பு நடைபெற்றது.