சென்னையில் கடந்த 10 ஆண்டுகளில் கல்லூரி மாணவர்களுக்கிடையே ஏற்பட்ட மோதல் சம்பவம் தொடர்பாக பதிவு செய்யப்பட்ட வழக்குகளின் விவரங்களை தாக்கல் செய்ய காவல்துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை மாநில கல்லூரியில் படித்த திருத்தணியை சேர்ந்த மாணவர் சுந்தர், அக்டோபர் 4-ம் தேதி, சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் பச்சையப்பன் கல்லூரி மாணவர்களால் சரமாரியாக தாக்கப்பட்டார்.
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த மாணவர் சுந்தர் அக்டோபர் 9ஆம் தேதி உயிரிழந்தார். இதையடுத்து, பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் 7 பேர் கைது செய்யப்பட்டு, அவர்களுக்கு எதிராக கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டது.
கைது செய்யப்பட்ட மாணவர்கள் ஜாமின் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தனர். இந்த மனுவானது நீதிபதி ஏ.டி.ஜெகதீஷ் சந்திரா அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.
அப்போது வாதங்களை கேட்டறிந்த நீதிபதி, கைது செய்யப்பட்ட மாணவர்களின் வருகைப் பதிவேட்டை வைத்து பார்க்கும் போது அவர்கள் பொறுப்பான மாணவர்களாக தெரியவில்லை எனக்கூறினார்.
சென்னையில் கடந்த 10 ஆண்டுகளில் கல்லூரி மாணவர்களுக்கு இடையே ஏற்பட்ட மோதல் தொடர்பாக காவல்துறை மற்றும் ரயில்வே போலீசாரால் பதிவு செய்யப்பட்ட வழக்குகள் குறித்த விவரங்களை அறிக்கையாக தாக்கல் செய்ய நீதிபதி உத்தரவிட்டார்.இதனைதொடர்ந்து வழக்கின் விசாரணை அடுத்த வாரத்திற்கு ஒத்திவைக்கப்பட்டது.