அமெரிக்காவில் அடுத்து அதிபராக பொறுப்பேற்கவுள்ள டொனால்ட் டிரம்பின் ஆட்சியிலிருந்து பொதுமக்கள் தப்பித்துக்கொள்ளும் வகையில், 4 ஆண்டுகள் சொகுசு கப்பல் பயண திட்டத்தை தனியார் நிறுவனம் அறிவித்துள்ளது.
அமெரிக்க அதிபர் தேர்தலில் வென்ற டொனால்ட் டிரம்ப் வரும் ஜனவரியில் பதவியேற்கவுள்ளார். ஏற்கெனவே கடந்த 2017 முதல் 2021 வரை நான்காண்டுகள் டிரம்ப் அதிபராக பதவி வகித்தபோது அவர் மேற்கொண்ட சில முடிவுகள் சர்ச்சைக்கு வழிவகுத்தன.
இந்த நிலையில், அடுத்து டிரம்பின் பதவிக்காலத்திலிருந்து தப்ப விரும்புபவர்களுக்கு ஃபுளோரிடாவை சேர்ந்த வில்லா வை ரெசிடன்ஸ் என்ற கப்பல் நிறுவனம் அசத்தல் ஆஃபர் ஒன்றை வெளியிட்டுள்ளது. அதன்படி, நான்காண்டுகள் சொகுசு கப்பலில் உலகை வலம்வரும் திட்டத்தை அந்நிறுவனம் வெளியிட்டுள்ளது.
இந்த நான்காண்டில் ஏழு கண்டத்திலும் 140 நாடுகள் வழியாக சுமார் 425 துறைமுக நகரங்களை சொகுசு கப்பல் உலா வரவுள்ளது. இதில் பயணிக்க விரும்புவோர் எந்த இடத்தில் இருந்து வேண்டுமானாலும் ஏறிக் கொள்ளலாம். பயணிகளுக்குத் தேவையான உணவு, உடற்பயிற்சி நிலையம், மசாஜ் சென்டர், மருத்துவ வசதி என சகல வசதிகளும் கப்பலில் இடம்பெற்றுள்ளன.
நான்காண்டுகள் பயணிப்பது என்றால், ஆண்டுக்கு தலா 40 ஆயிரம் டாலர் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதேசமயம், நான்காண்டுக்கு குறைவாகவும் பயண ஆஃபர் இருப்பதாக கப்பல் நிறுவனம் தெரிவித்துள்ளது.