டெல்லியில் உள்ள ஜாமியா மில்லியா இஸ்லாமிய பல்கலைக் கழகத்தில் முஸ்லிம் அல்லாதவர்கள் மீது பாகுபாடு காட்டுவது மற்றும் பிற மதத்தினரை இஸ்லாமிற்கு மத மாற்றம் செய்வது குறித்த அறிக்கையை உண்மை கண்டறியும் குழு வெளியிட்டது.
ஜே.எம்.ஐ. என அழைக்கப்படும் ஜாமியா மில்லியா இஸ்லாமிய பல்கலைக் கழகத்தில், முஸ்லீம் அல்லாதவர் என்ற காரணத்தால் ராம் நிவாஸ் என்பவர் பாகுபாடு காட்டப்பட்டு துன்புறுத்தப்பட்டதாக கூறி, கடந்த ஆகஸ்ட் 4-ம் தேதி ஜந்தர் மந்தரில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதனையடுத்து கால் ஃபார் ஜஸ்டிஸ் என்ற தன்னார்வ தொண்டு நிறுவனத்தால், ஓய்வுபெற்ற முன்னாள் நீதிபதி ஸ்ரீ எஸ்.என். திங்ரா, முன்னாள் டெல்லி காவல் ஆணையர் ஸ்ரீ எஸ்.என். ஸ்ரீவஸ்தவா ஆகியோர் அடங்கிய உண்மை கண்டறியும் குழு அமைக்கப்பட்டது..
இந்நிலையில் அந்த குழு முஸ்லிம் அல்லாதவர்கள் மீது பாகுபாடு காட்டுதல் மற்றும் மத மாற்றம் செய்வது குறித்த தங்களது அறிக்கையை வெளியிட்டது.
அதன்படி முஸ்லிம் அல்லாத ஒருவர் மாணவராகவோ அல்லது ஆசிரியராகவோ இருந்தாலும் அந்த பல்கலைக் கழகத்தில் இருந்து நீக்கப்படுவது கண்டறியப்பட்டுள்ளது.முஸ்லீம் அல்லாதவர்களுடன் தவறாக நடந்து கொள்வது, கேலி செய்வது மற்றும் பாகுபாடு காட்டுவதும் கண்டறியப்பட்டுள்ளது.
இதேபோல முஸ்லிம் அல்லாத ஆசிரியர்களுக்கான உட்காரும் இடம், அறை, தளவாடங்கள் போன்ற வசதிகள் வழங்கப்படவில்லை என்பதும் கண்டறியப்பட்டுள்ளது.இந்த பிரச்னைகளால் பழங்குடியின மாணவர்கள் பல்கலைக் கழகத்தை விட்டு வெளியேறுவது கண்டறியப்பட்டுள்ளதாகவும் அக்குழு தெரிவித்தது.
சில மதம் மாறிய முஸ்லிம்கள் தங்களைப் போலவே பிறரையும் மிகவும் வலுக்கட்டாயமாக இஸ்லாத்திற்கு மாற்ற முயற்சிப்பதும் கண்டறியப்பட்டுள்ளது. ஜே.எம்.ஐ. குறித்த அறிக்கை, உள்துறை இணை அமைச்சர் ஸ்ரீ நித்யநாத் ராய், கல்வி அமைச்சகம் மற்றும் டெல்லி துணை நிலை ஆளுநர் ஆகியோரிடம் சமர்ப்பிக்கப்படும் என உண்மை கண்டறியும் குழு தெரிவித்துள்ளது.