மகாராஷ்டிரா மாநிலத்திற்கு தேர்தல் பிரச்சாரம் செய்ய சென்ற போது தமது ஹெலிகாப்டரை தேர்தல் ஆணைய அதிகாரிகள் சோதனை செய்ததாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள எக்ஸ் தள பதிவில், இன்று, மகாராஷ்டிராவின் ஹிங்கோலி சட்டமன்றத் தொகுதியில் தேர்தல் பிரச்சாரத்தின் போது, எனது ஹெலிகாப்டரை தேர்தல் ஆணைய அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.
நேர்மையான தேர்தல் மற்றும் ஆரோக்கியமான தேர்தல் முறையை பாஜக நம்புகிறது. தேர்தல் ஆணையத்தின் அனைத்து விதிகளையும் பின்பற்றுகிறது. ஆரோக்கியமான தேர்தல் முறைக்கு நாம் அனைவரும் பங்களிக்க வேண்டும் . உலகின் வலிமையான ஜனநாயக நாடாக இந்தியாவை நிலைநிறுத்த ல் நமது கடமைகளைச் செய்ய வேண்டும் என அமித் ஷா தெரிவித்துள்ளார்.
முன்னதாக யவத்மாலில் பாஜக தலைமையிலான மகாயுதி கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து அமித்ஷா பிரசாரம் மேற்கொண்டார். அப்போது அவுரங்காபாத்துக்கு சத்ரபதி ஷாம்பாஜி நகர் என பெயர் சூட்டியபோது அதற்கு உத்தவ் தாக்கரே எதிர்ப்பு தெரிவித்ததை நினைவுகூர்ந்த அமித்ஷா, உண்மையான சிவசேனா இதற்கு எதிர்ப்பு தெரிவிக்குமா என கேள்வி எழுப்பினார்.
மேலும், தங்களுடன் கூட்டணியில் இருக்கும் மகாராஷ்டிர முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான கட்சிதான் உண்மையான சிவசேனா என்றும் அமித்ஷா கூறினார்.