சபரிமலை ஐயப்பன் கோயில் நடை திறந்த முதல் நாளில், 70 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.
மண்டல மற்றும் மகர விளக்கு பூஜையொட்டி, கடந்த 15ஆம் தேதி கோவில் நடை திறக்கப்பட்டது. அப்போது, மேல் சாந்தியாக தேர்வு செய்யப்பட்ட அருண் நம்பூதிரி, தலையில் இருமுடியுடன் சென்று ஐயப்பனை தரிசனம் செய்தார். இந்நிலையில், நேற்று அதிகாலை 3 மணிக்கு கோவிலில் நடை திறக்கப்பட்டது.
முதல் நாளான நேற்று 70 ஆயிரம் பக்தர்கள் ஆன்லைன் மூலமாக முன்பதிவு செய்து சுவாமி தரிசனம் செய்தனர். தொடர்ந்து 41 நாட்கள் தினமும் சிறப்பு பூஜையும் , டிசம்பர் 27 -ம் தேதி மண்டல பூஜையும் நடைபெறுகிறது.
மேலும் சன்னிதானம், பம்பை, நிலக்கல் உள்ளிட்ட 200- க்கும் மேற்பட்ட இடங்களில் கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டுள்ளது. இதையொட்டி நிலக்கல் முதல் சன்னிதானம் வரை 48 இடங்களில் வைஃபை வசதியும் செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில் சுவாமி தரிசனம் செய்ய பக்தர்களை அனுமதிப்பதில் கால தாமதம் ஏற்படுவதாகவும் இதனால் மிகுந்த சிரமம் ஏற்படுவதாகவும் பக்தர்கள் வேதனை தெரிவிக்கின்றனர். குழந்தைகளுக்கேனும் தனி வழி ஏற்படுத்தி தர வேண்டும் எனவும் கோரிக்கை வைத்தனர்.
இந்நிலையில் நேற்று பக்தர்கள் தரிசன நேர முடிந்ததும் ஹரிவராசனம் பாடலுடன் இரவு கோயில் நடை அடைக்கப்பட்டது.