3 நாடுகளுக்கு அரசு முறை பயணம் மேற்கொண்ட பிரதமர் மோடி நைஜீரியா சென்றடைந்தார்.
நைஜீரிய அரசின் அழைப்பை ஏற்று நேற்று தனி விமானம் மூலம் அந்நாட்டிற்கு புறப்பட்ட பிரதமர் மோடி அபுஜா விமான நிலையம் சென்றடைந்தார். கடந்த 17 ஆண்டுகளில் இந்திய பிரதமர் ஒருவர் நைஜீரியாவுக்கு மேற்கொள்ளும் முதல் பயணம் இதுவாகும். முன்னதாக விமான நிலையம் சென்றைடந்த பிரதமர் மோடிக்கு அங்கு இந்திய வம்சாவளியினர் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
நைஜீரியாவில் முக்கிய தலைவர்களை சந்திக்கும் பிரதமர் மோடி இரு நாடுகள் இடையிலான உறவை மேம்படுத்தும் வழிகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்த உள்ளார். இதனை தொடர்ந்து வரும் 18 மற்றும் 19ஆம் தேதிகளில் ரியோ டி ஜெனிரோ நகரில் நடைபெறும் ஜி20 மாநாட்டில் பங்கேற்க அவர் பிரேசில் செல்கிறார்.
பின்னர், 19ம் தேதி கயானாவுக்கு சென்று அங்கு நடைபெறும் CARICOM – INDIA உச்சி மாநாட்டில் கலந்துகொள்கிறார்.1968 -ம் ஆண்டுக்கு பின்னர் கயானாவிற்கு செல்லும் முதல் பிரதமர் மோடி என்பது குறிப்பிடத்தக்கது.
இதனிடையே தமது பயணம் தொடர்பாக ட்விட்டரில் பதிவிட்டுள்ள பிரதமர் மோடி, பிரேசிலில் நடைபெறும் மாநாட்டில் ஒரே பூமி, ஒரே குடும்பம், ஒரே எதிர்காலம் என்ற நமது பார்வைக்கு ஏற்ப அர்த்தமுள்ள விவாதங்களை எதிர்பார்ப்பதாக தெரிவித்துள்ளார்.
அத்துடன், பாரம்பரியம் மற்றும் கலாச்சார மதிப்பு அடிப்படையில் தனித்துவமான உறவை பலப்படுத்துவது குறித்து கருத்துகளை முன்வைக்கவுள்ளதாகவும் கூறியுள்ளார்.