ஈரோடு அருகே வீட்டை அபகரிக்க முயற்சிக்கும் அரசு பள்ளி தலைமை ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி பாதிக்கப்பட்ட பெண் ஆசிரியர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.
கோபிசெட்டிபாளையம் பகுதியை சேர்ந்த பிரபா, வண்ணாந்துறை புதூரில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வருகிறார். இவர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் ஒன்றை அளித்தார்.
அதில், கடந்த 2014-ஆம் ஆண்டு அரசு பள்ளி தலைமை ஆசிரியரான முத்துராமசாமி என்பவரிடம் தனது வீட்டை அடமானம் வைத்து 15 லட்சம் ரூபாய் கடன் பெற்றதாக தெரிவித்துள்ளார். ஆனால் கடனை முழுமையாக செலுத்திய பின்னரும் தனது பெயருக்கு வீட்டை எழுதி தராமல் அபகரிக்க தலைமை ஆசிரியர் முத்துராமசாமி முயற்சிப்பதாக குற்றம் சாட்டியுள்ளார்.
தனது வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்த முத்துராமசாமியின் ஆதரவாளர்கள், தங்களை தாக்கி கொலை மிரட்டல் விடுத்ததாகவும் புகாரில் தெரிவித்துள்ளார். ஆகவே, இதுகுறித்து தக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென ஆசிரியை பிரபா கேட்டுக்கொண்டுள்ளார்.