சங்கீத கலாநிதி விருதை எம்.எஸ்.சுப்புலட்சுமி பெயரில், பாடகர் டி.எம்.கிருஷ்ணாவுக்கு வழங்க சென்னை உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது.
பாடகர் டி.எம்.கிருஷ்ணாவுக்கு சங்கீத கலாநிதி விருது வழங்குவதற்கு தடை கோரி, மறைந்த கர்நாடக இசைப் பாடகி எம்.எஸ்.சுப்புலட்சுமியின் பேரன் சீனிவாசன் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
அவர் தாக்கல் செய்த மனுவில், சென்னை மியூசிக் அகாடமியும், தனியார் நாளிதழும் இணைந்து 2005-ம் ஆம் ஆண்டு முதல் சங்கீத கலாநிதி எம்.எஸ்.சுப்புலட்சுமி என்ற விருதை இசை மேதைகளுக்கு வழங்கி வருவதாக தெரிவித்திருந்தார்.
மியூசிக் அகாடமியின் 98-வது ஆண்டு விழாவையொட்டி வரும் டிசம்பர் மாதம் நடைபெறவுள்ள நிகழ்ச்சியில், சங்கீத கலாநிதி விருது பாடகர் டி.எம்.கிருஷ்ணாவுக்கு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளதாக மனுவில் குறிப்பிட்டிருந்தார்.
தனது பாட்டிக்கு எதிராக அவதூறு கருத்துக்களை சமூக ஊடகங்களில் பேசி வரும் பாடகர் டி.எம்.கிருஷ்ணாவிற்கு, இந்த விருதை வழங்குவது தங்கள் குடும்பத்தாருக்கு வேதனையை ஏற்படுத்தியிருப்பதாகவும் அவர் மனுவில் தெரிவித்திருந்தார்.
மலிவான விளம்பரத்திற்காக கர்நாடக இசையுலகில் அவர் மீதான நம்பகத்தன்மையை, கேள்விக்குறியாக்கிய டி.எம்.கிருஷ்ணாவை தனது பாட்டி பெயரில் எப்படி கௌரவிக்க முடியும் எனவும் அவர் கேள்வி எழுப்பியிருந்தார்.
இந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஜெயச்சந்திரன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தபோது, வாதங்களை கேட்ட நீதிபதி பாடகர் கிருஷ்ணாவிற்கு எம்.எஸ்.சுப்புலட்சுமி பெயரில் விருது வழங்க தடை விதித்தார்.
அதேநேரத்தில் மறைந்த பாடகி எம்.எஸ்.சுப்புலட்சுமியின் பெயரை பயன்படுத்தாமல் விருது வழங்க தடையில்லை எனவும் நீதிபதி ஜெயச்சந்திரன் தெரிவித்தார்.