கல்வராயன் மலைப்பகுதியில் உள்ள வெள்ளிமலை – சின்னதிருப்பதி இடையேயான சாலை எப்போது அமைக்கப்படும் என்பது குறித்து பிரமாண பத்திரம் தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் அருந்தி 60-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததை அடுத்து கல்வராயன் மலைப்பகுதி மக்களின் சமூக, வாழ்வியல் மேம்பாடு தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றம் தாமாக முன்வந்து, வழக்கை விசாரணைக்கு எடுத்தது.
இதில் நீதிமன்றத்திற்கு உதவுவதற்காக நியமிக்கப்பட்ட வழக்கறிஞர் சாலை வசதிகள் முறையாக இல்லாததால் கல்வராயன் மலைப்பகுதியில் மக்கள் பல சிரமங்களை சந்திப்பதாக தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் இதுகுறித்த வழக்கு விசாரணையின் போது அரசுத் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் கல்வராயன் மலைப் பகுதியில் 10 கிலோ மீட்டருக்கு சாலை சீரமைக்கப்பட்டுள்ளதாகவும், மண் சாலைகளை சீரமைக்க கால அவகாசம் வேண்டும் என்றும் தெரிவித்தார்.
அப்போது, கல்வராயன் மலைப்பகுதியின் முக்கிய சாலையான வெள்ளிமலை- சின்ன திருப்பதி இடையேயான சாலை பணிகள் எப்போது முடிக்கப்படும் என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த அரசு தரப்பு வழக்கறிஞர், சாலை அமைப்பதற்கான மதிப்பீடு பணிகள் நிறைவடைந்துள்ளதாகவும், கூடிய விரைவில் பணிகள் முடிக்கப்படும் என்றும் கூறினார்.
இதனையடுத்து, வெள்ளிமலை – சின்ன திருப்பதி இடையேயான சாலை எப்போது அமைக்கப்படும் என்பது குறித்து பிரமாண பத்திரம் தாக்கல் செய்ய உத்தரவிட்ட நீதிபதிகள், விசாரணையை நவம்பர் 26-ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.