ஹரியானா மாநிலம் ஜிண்டால் குளோபல் பல்கலைக்கழகமும், சென்னை ஐ.ஐ.டியும் இணைந்து அதிநவீன வசதிகளுடன் கூடிய அரை மனித ரோபாவை தயாரித்துள்ளது. அரசியலமைப்பு அருங்காட்சியகத்தின் சிட்டியாக செயல்படவிருக்கும் சம்வித் ரோபோட் குறித்து இந்த செய்தி தொகுப்பில் சற்று விரிவாக பார்க்கலாம்.
இந்திய அரசியலமைப்புச் சட்டம் என்பது நீதித்துறைக்கு மட்டுமல்லாமல் இந்தியாவில் வாழும் ஒவ்வொரு குடிமகனின் உரிமையையும் பிரதிபலிக்கும் வகையில் அமைந்திருக்கிறது. இந்திய அரசியலமைப்புச் சட்டம் உருவாக்கப்பட்டு 75 ஆண்டுகள் நிறைவடைந்ததையொட்டி ஹரியானா மாநிலம் சோனிபட் நகரில் உள்ள ஜிண்டால் குளோபல் பல்கலைக்கழக வளாகத்தில் கட்டப்பட்டுள்ள அருங்காட்சியகம் வரும் 26 ஆம் தேதி தேசத்திற்காக அர்ப்பணிக்கப்பட உள்ளது.
இந்திய அரசியலமைப்புச் சட்டம் மற்றும் சுதந்திரங்கள் குறித்த ஒருங்கிணைந்த பயிலகமாக உருவாக்கப்பட்டுள்ள இந்த அரசியலமைப்பு அருங்காட்சியகத்தில் வரலாற்றுச் சிறப்புமிக்க சட்டங்கள் அனைத்தும் ஏடுகளில் பொறிக்கப்பட்டு காட்சிபடுத்தப்பட உள்ளன. நவீன தொழில்நுட்பம், செயற்கை நுண்ணறிவால் இயக்கப்படும் சாதனங்கள் ஆகியவை முக்கிய அம்சங்களாக இருந்தாலும், அருங்காட்சியகத்திற்கு வரும் தனி நபர்களுக்கு ஒத்துழைப்பு வழங்கும் விதமாக அரை மனித ரோபாவை ஜிண்டால் குளோபல் பல்கலைக்கழகமும், ஐஐடி சென்னையும் இணைந்து உருவாக்கியுள்ளன.
இந்திய அரசியலமைப்பு அருங்காட்சியகத்திற்கு வரும் ஒவ்வொருவருக்கும் சிறந்த வழிகாட்டியாக செயல்படும் வகையில் இந்த ரோபோ வடிவமைக்கப்பட்டுள்ளது. ஆங்கிலம், இந்தி ஆகிய மொழிகளில் அரசியலமைப்பு சட்டத்த்தின் அத்தனை அம்சங்களையும் உரிமைகளையும் இந்த ரோபாவால் விளக்க முடியும் என்கின்றனர் ரோபோவை வடிவமைத்த வல்லுநர்கள்
60 கிலோ எடையில் தயாரிக்கப்பட்டுள்ள இந்த ரோபா, அரை மனித உருவத்துடன் 4 சிறிய சக்கரங்கள் உடன் நகரும் திறன் கொண்டதாக வடிவமைக்கப்பட்டுள்ளது. சிறிய வகையிலான தொடுதிரை வசதி கொண்ட இந்த ரோபோவுடன் பேசுவதோடு மட்டுமில்லாமல் ஸ்கிரீன் வாயிலாக கமெண்டுகளை கொடுத்தும் இயக்கச் செய்யலாம் எனவும் கூறப்படுகிறது.
வரலாற்றுச் சிறப்புகளை இளைய தலைமுறையினருக்கு கொண்டு சேர்க்கும் வகையில் நவீன தொழில் நுட்பங்களை பயன்படுத்தி அனைவராலும் ரசிக்கக் கூடிய வகையில் தயாரிக்கப்பட்டிருக்கும் இந்த ரோபா, தொழில்நுட்ப வளர்ச்சியின் அடுத்த மைல்கல்லாக அமையும் என்பதில் யாருக்கும் ஐயமில்லை.