ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் தமிழகத்தை நோக்கி வேகமாக நகந்து வருவதால், மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் பரவலாக கனமழை பெய்து வருகிறது.
சேலம் ஏற்காட்டில் கடும் பனி மூட்டத்துடன் கூடிய சாரல் மழை பெய்தது. இதனால் ஏற்காடு மற்றும் சுற்றுவட்டார பகுதி முழுவதும் கடும் பனி சூழ்ந்து 5 அடி தூரத்தில் இருப்பது கூட தெரியாத சூழல் உள்ளது. பனி மூட்டம் காரணமாக வாகன ஓட்டிகள், முகப்பு விளக்கை எரியவிட்டவாரு வாகனங்களை ஓட்டி சென்றனர்.
மேலும் ஏற்காடு முழுவதும் கடும் குளிர் நிலவி வருகிறது. கடும் பனி மூட்டத்ததாலும் மழையாலும் உள்ளூர் மக்களின் இயல்பு வாழ்க்கை மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது.
புதுக்கோட்டையில் தொடர்ந்து பெய்து வரும் மழையால் மாணவ மாணவிகள் மழையில் நனைந்தபடியே வீட்டுக்குச் சென்றனர். மாவட்ட நிர்வாகம் மாணவர்களின் நலம் கருதி மழைக்காலங்களில் பள்ளிக்கு விடுமுறை அளிக்க வேண்டுமென பெற்றோர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மதுரையில் அறுவடை செய்யப்பட்ட நெல்மணிகள், அரசு கொள்முதலுக்காக சாலையோரங்களில் டன் கணக்கில் குவிக்கப்பட்டு மழையில் நனைந்து வீணாகி வருவதாக விவசாயிகள் குற்றம் சாட்டியுள்ளனர். மதுரை சுற்றியுள்ள வாடிப்பட்டி, சோழவந்தான், சமயநல்லூர், பரவை, அலங்காநல்லூர் மற்றும் பாலமேடு உள்ளிட்ட பகுதிகளில் கடந்த 2 மணி நேரத்திற்கும் மேலாக மிதமான மழை பெய்தது. அறுவடை செய்யப்பட்ட நெல்மணிகள் அரசின் கொள்முதலுக்காக சாலையோரங்களில் டன் கணக்கில் குவித்து வைக்கப்பட்டுள்ளது.
அவைகள் போதிய பாதுகாப்பின்றி மழையில் நனைந்து சேதம் அடைந்து வருவதாக விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர். எனவே, வானிலையை கருத்தில் கொண்டு, அரசு விரைவாக நெல் கொள்முதல் செய்யவேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.