அதானி விவகாரம் தொடர்பாக நாடாளுமன்ற கூட்டுக்குழு விசாரணை நடத்த உத்தரவிடக்கோரி இண்டி கூட்டணி கட்சி எம்.பி.க்கள் நாடாளுமன்றத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் கடந்த 25-ஆம் தேதி தொடங்கியது. இதில் தொழிலதிபர் அதானி மீது அமெரிக்க நீதிமன்றத்தில் தொடரப்பட்டுள்ள ஊழல் வழக்கு, மணிப்பூர் இனக்கலவரம், குறைந்தபட்ச ஆதரவு விலை, உத்தரப்பிரதேச மாநிலம் சம்பலில் நடந்த கலவரம் குறித்து விவாதம் நடத்த எதிர்க்கட்சிகள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து அவையை முடக்கி வருகின்றன.
இந்நிலையில் சம்பல் பகுதிக்கு ராகுல் மற்றும் பிரியங்கா காந்தியை அனுமதிக்காததை கண்டித்து மக்களவை காங்கிரஸ் எம்.பிக்கள் வெளிநடப்பு செய்தனர். பின்னர் அதானி விவகாரம் தொடர்பாக நாடாளுமன்ற கூட்டுக்குழு விசாரணை நடத்த உத்தரவிடக்கோரி இண்டி கூட்டணி கட்சி எம்.பி.க்கள் நாடாளுமன்ற வளாகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.