போதைப்பொருள் வைத்திருந்த நபர்களுடன் தொடர்பில் இருந்ததாக கைது செய்யப்பட்ட மன்சூர் அலிகான் மகன் உள்பட 7 பேருக்கு 15 நாட்கள் நீதிமன்ற காவல் வழங்கி சென்னை அம்பத்தூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது
போதைப்பொருள் கடத்தி விற்பனை செய்வோருடன் தொடர்பில் இருந்ததுடன், போதைப்பொருள் வாங்கி பயன்படுத்திய, நடிகர் மன்சூர் அலிகானின் மகன் அலிகான் துக்ளக் உள்பட 7 பேரை ஜெ.ஜெ.நகர் போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் விசாரணை மேற்கொண்ட போலீசார், பின்னர் அம்பத்தூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். அப்போது அலிகான் துக்ளக்கிற்கு ஜாமீன் வழங்க மறுப்பு தெரிவித்த நீதிபதி, கைதான 7 பேரையும் டிசம்பர் 18-ஆம் தேதிவரை காவலில் வைக்க உத்தரவிட்டார்.
இந்நிலையில் நீதிமன்ற வளாகத்தில் நடிகர் மன்சூர் அலிகான் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், பள்ளி, கல்லூரி, ரயில் நிலையம் என அனைத்து இடங்களிலும் போதைப்பொருள் கிடைப்பதால் இளைஞர்கள் பாதிக்கப்படுவதாக தெரிவித்தார்.
விமான நிலையங்கள், பேருந்து நிலையங்களில் பறிமுதல் செய்யப்படும் போதைப்பொருள் என்னவாகிறது என்பது தெரியவில்லை என கூறிய அவர் தமிழக அரசு ஒட்டுமொத்தமாக டாஸ்மாக்கை ஒழிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்.