யுனைடெட் ஹெல்த்கேர் CEO பிரையன் தாம்சன் நியூயார்க் மிட் டவுன் மன்ஹாட்டன் ஹோட்டலுக்கு வெளியே சுட்டுக் கொல்லப்பட்டருக்கிறார்.இது திட்டமிட பட்ட, வெட்கக்கேடான தாக்குதல் என்று, காவல்துறை தெரிவித்துள்ளது.
பிரையன் தாம்சன் யார்? அவரின் பின்னணி என்ன ? ஏன் படுகொலை செய்யப்பட்டார் ? என்பது பற்றிய ஒரு செய்தி தொகுப்பு.
யுனைடெட் ஹெல்த்கேர் என்பது அமெரிக்காவின் மிகப்பெரிய சுகாதார காப்பீட்டு நிறுவனமாகும். Fortune 500 பட்டியலில் நான்காவது இடத்தில் யுனைடெட் ஹெல்த்கேர் உள்ளது. இது வேறு எந்த நாட்டையும் விட சுகாதாரப் பாதுகாப்புக்காக அதிக பணம் செலுத்தும் பல்லாயிரக்கணக்கான அமெரிக்கர்களைத் தன் வாடிக்கையாளர்களாக வைத்துள்ளது.
இந்நிறுவனம், முதியோருக்கான அரசு திட்டமான, மெடிகேர் அட்வாண்டேஜ் திட்டங்களை வழங்குவதில் மிகப்பெரிய நிறுவனமாகும். மேலும் முதலாளிகளுக்கான காப்பீடு உட்பட மாநில மற்றும் மத்திய அரசின் நிதியுதவி பெறும் மருத்துவ உதவித் திட்டங்களுக்கான உடல்நலக் காப்பீட்டையும் நிர்வகித்து வருகிறது.
இந்நிறுவனத்தின் ஆண்டு வருவாய் 281 பில்லியன் அமெரிக்க டாலராகும். 140,000 க்கும் மேற்பட்ட ஊழியர்களைக் கொண்டுள்ள இந்நிறுவனத்தின் BACK OFFICE இந்தியாவில் இயங்குகிறது.
பள்ளிக் காலத்தில், நட்சத்திர மாணவராகவும், தடகள வீரராகவும், விளங்கிய தாம்சன், 1997 ஆம் ஆண்டில், அயோவா பல்கலைக்கழகத்தில் கணக்கியலில் முதுகலைப் பட்டத்துடன் வணிக நிர்வாகத்தில் இளங்கலைப் பட்டம் பெற்றார். தனது மனைவி பாலேட் மற்றும் தனது இரண்டு குழந்தைகளுடன் மின்னசோட்டாவில் ஐந்து படுக்கையறைகள் கொண்ட வீட்டில் வசித்து வந்தார் தாம்சன்.
2004ம் ஆண்டு முதல் பல துறைகளில் பணிபுரிந்த பிரையன் தாம்சன், யுனைடெட் ஹெல்த்கேர் நிறுவனத்தில் பணியில் சேர்ந்தார். யுனைடெட் ஹெல்த் குழுமத்தின் சுகாதார காப்பீட்டுப் பிரிவான யுனைடெட் ஹெல்த்கேரின் தலைமை நிர்வாக அதிகாரியாக 2021ம் ஆண்டு நியமிக்கப்பட்டார்.
கடந்த மூன்று ஆண்டுகளுக்கும் மேலாக யுனைடெட் ஹெல்த்கேரின் மெடிகேர் போன்ற அரசு திட்டங்கள் உட்பட பெரிய அளவிலான சுகாதார காப்பீட்டு நடவடிக்கைகளில் வெற்றிகரமாக செயலாற்றி வந்தார்.
தாம்சனின் உழைப்பால், நிறுவனம் கடந்த காலாண்டில் $ 74 பில்லியன் அமெரிக்க டாலர் வருவாயை ஈட்டியது. இதன் காரணமாக , சுகாதார காப்பீட்டுப் பிரிவு, யுனைடெட் ஹெல்த் குழுமத்தின் மிகப்பெரிய துணை நிறுவனமாக மாறியது.
யுனைடெட் ஹெல்த் குழுமத்தில் அதிக சம்பளம் வாங்கும் நிர்வாகிகளில் தாம்சனும் ஒருவர்.கடந்த ஆண்டுக்கான தாம்சனின் இழப்பீட்டுத் தொகுப்பு மட்டும், 10.2 மில்லியன் அமெரிக்க டாலராகும்.
கடந்த மே மாதம் தாம்சன் மீது மோசடி மற்றும் சட்டவிரோதமாக நிறுவனத்தில் உள் வர்த்தகம் செய்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பாக வழக்கும் தொடரப் பட்டது.
அமெரிக்க நீதித்துறையின் விசாரணை முடிவுகள் வெளிவருவதற்கு முன், மொத்தம் 120 மில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பிலான நிறுவனத்தின் பங்குகளை விற்றதாகவும் தாம்சன் மீது குற்றம்சாட்டுக்கள் எழுந்தன.
இந்நிலையில், யுனைடெட் ஹெல்த்கேர், கடந்த புதன்கிழமை காலை நியூயார்க்கில் அதன் வருடாந்திர முதலீட்டாளர் கூட்டத்துக்கு ஏற்பாடு செய்திருந்தது. கூட்டம் தொடங்குவதற்கு ஒரு மணி நேரத்துக்கு முன், பிரையன் தாம்சன் மன்ஹாட்டன் ஹோட்டலுக்கு வெளியே சுட்டுக் கொல்லப்பட்டருக்கிறார். கிரீம் நிற ஜாக்கெட் மற்றும் சாம்பல் நிற பேக் பேக் அணிந்திருந்த மர்ம நபர், தாம்சனை சுட்டு விட்டு தப்பியதாக காவல் துறை தெரிவித்துள்ளது.
யுனைடெட் ஹெல்த் நிறுவனம் அமைந்துள்ள மின்சோட்டாவின் ஆளுநர் டிம் வால்ஸ், தாம்சனின் குடும்பத்தினருக்கும் யுனைடெட் ஹெல்த்கேர் குழுமத்துக்கும் இரங்கல் தெரிவித்திருப்பதோடு, தாம்சனின் மறைவு, மின்சோட்டாவில் வணிக மற்றும் சுகாதார அமைப்புக்கு பேரிழப்பாகும் என்றும் கூறியிருக்கிறார்.
காப்பீட்டு திட்டங்களில் உள்ள “கவரேஜ் குறைபாடு” காரணமாக தாம்சன் கொல்லப்பட்டிருக்கலாம் என்று கூறிய தாம்சனின் மனைவி, ஏற்கெனவே தாம்சனுக்கு கொலை அச்சுறுத்தல் இருந்ததாகவும் தெரிவித்திருக்கிறார்.
நம்பமுடியாத புத்திசாலியாக திறமையான சுகாதார காப்பீட்டுத் துறையின் திறமையான தலைவராக, விளங்கிய தாம்சனின் கொலையால் , ஹெல்த் கேர் வணிக சந்தை அதிர்ச்சியில் உறைந்திருக்கிறது.