மாநிலங்களவை தலைவர் ஜகதீப் தன்கருக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானத்தை இண்டி கூட்டணி கட்சியினர் கொண்டு வந்தனர்.
அதானி மற்றும் அமெரிக்க தொழிலதிபர் ஜார்ஜ் சோரஸ் விவகாரங்களை முன்வைத்து ஆளும் கட்சி உறுப்பினர்களும், எதிர்க்கட்சி உறுப்பினர்களும் பரஸ்பரம் குற்றம்சாட்டியதால், மாநிலங்களவையில் அமளி ஏற்பட்டது.
அதேசமயம், மாநிலங்களவைத் தலைவர் ஜகதீப் தன்கர் பாரபட்சத்துடன் செயல்படுவதாக இண்டி கூட்டணியினர் குற்றம்சாட்டி, அவருக்கு எதிராக அவையில் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவந்தனர்.
தீர்மானத்தில் இண்டி கூட்டணியில் அங்கம் வகிக்கும் திரிணாமூல் காங்கிரஸ், ஆம் ஆத்மி மற்றும் சமாஜவாடி உள்ளிட்ட கட்சிகளை சேர்ந்த 65 பேர் கையொப்பமிட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
மொத்தம் 245 உறுப்பினர்களைக் கொண்ட மாநிலங்களவையில் ஆளும் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு 125 எம்.பி.க்களும், இண்டி கூட்டணிக்கு 88 எம்.பி.க்களின் ஆதரவும் உள்ள நிலையில், எதிர்க்கட்சிக்கு பெரும்பான்மை இல்லாததால் இந்தத் தீர்மானம் வெற்றி பெற வாய்ப்பில்லை என்று கூறப்படுகிறது.
இந்திய நாடாளுமன்ற வரலாற்றில் அவைத் தலைவருக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவரப்படுவது இதுவே முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது.