இஸ்ரேல் – பாலஸ்தீன பிரச்னையின் போது கருத்து தெரிவித்திருந்த முதலமைச்சர் ஸ்டாலின், வங்கதேசத்தில் தாக்கப்படும் மக்களுக்கு ஆதரவாக ஏன் கருத்து தெரிவிக்கவில்லை என பாஜக சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் கேள்வி எழுப்பியுள்ளார்.
சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்ட துணை மதிப்பீடுகள் மீதான விவாதத்தில் பங்கேற்று பேசிய பாஜக சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன், சிங்கப்பூர் மாதிரியாக இல்லாவிட்டாலும் கூட, திருச்சி அளவிற்காவது கோவையை தூய்மையாக வைத்திருக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தார்.
ஆண்டுக்கணக்கில் குறைவான சம்பளத்திற்கு பணியாற்றி வரும் தூய்மைப் பணியாளர்களுக்கு பணி நிரந்தரம் வழங்கி அவர்களை அரசுப் பணியாளராக்க வேண்டும் எனவும் வலியுறுத்தினார்.
கோயில் யானைகளுக்கு புத்துணர்வு முகாம் நடத்தப்படாத காரணத்தினால் திருச்செந்தூர் கோயில் யானை தாக்கி இருவர் உயிரிழந்ததாகவும் வானதி சீனிவாசன் குற்றம்சாட்டினார்.
அதற்கு பதிலளித்து பேசிய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, திமுக ஆட்சியில் கோயில் யானைகள் முறையாக பராமரிக்கப்படுவதாகவும், உணவு முதல் மருந்து மாத்திரைகள் வரை அனைத்தும் உரிய நேரத்தில் வழங்கப்படுவதாகவும் தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய வானதி சீனிவாசன், இஸ்ரேல் – பாலஸ்தீன பிரச்னையின் போது குரல் கொடுத்த முதலமைச்சர், வங்கதேசத்தில் தாக்கப்படும் மக்களுக்கு ஆதரவாக ஏன் கருத்து தெரிவிக்கவில்லை என கேள்வி எழுப்பினார்.