கூட்ட நெரிசலில் சிக்கி பெண் உயிரிழந்த விவகாரத்தில் கைதான நடிகர் அல்லு அர்ஜூன், இடைக்கால ஜாமினில் விடுவிக்கப்பட்டார்.
ஹைதராபாத்தில் அண்மையில் புஷ்பா-2 சிறப்புக் காட்சியைக் காண சென்ற நடிகர் அல்லு அர்ஜுனை பார்க்க ரசிகர்கள் குவிந்தனர். அப்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி பெண் ஒருவர் உயிரிழந்தார்.
இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்த ஹைதராபாத் போலீஸார், அல்லு அர்ஜூனை கைது செய்தனர். தொடர்ந்து மருத்துவப் பரிசோதனைக்குப் பின் ஹைதராபாத் நீதிமன்றத்தில் அவர் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில், அல்லு அர்ஜுனை 14 நாள் நீதிமன்றக் காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார்.
இதனிடையே, நடிகர் அல்லு அர்ஜுன் தாக்கல் செய்த ஜாமீன் மனுவை விசாரித்த ஹைதராபாத் உயர்நீதிமன்றம் அவருக்கு இடைக்கால ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது. இதையடுத்து சஞ்சல்குடா மத்திய சிறையில் இரவு முழுவதும் அடைக்கப்பட்டிருந்த அல்லு அர்ஜூன், காலையில் விடுவிக்கப்பட்டார்.
விடுதலையான பின் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த நடிகர் அல்லு அர்ஜூன், பெண் உயிரிழந்தது துரதிர்ஷ்டவசமான சம்பவம் என்றும் அதற்கு வருந்துவதாகவும் கூறினார்.அனைவரது அன்புக்கும், ஆதரவுக்கும் நன்றி கூறிய அல்லு அர்ஜூன், தான் நலமாக இருப்பதாகவும், கவலைப்பட ஒன்றும் இல்லை எனவும் கூறினார். மேலும், தான் இந்திய சட்டத்திற்கு ஒத்துழைப்பு வழங்குவேன் எனவும் அல்லு அர்ஜூன் தெரிவித்தார்.