உத்தரபிரதேசத்தில் நடைபெறும் மகா கும்பமேளாவில் 45 கோடி பேர் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
பிரயாக்ராஜ் நகரின் திரிவேணி சங்கமத்தில் ஆண்டுதோறும் கும்பமேளா நடைபெறும் நிலையில், 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை மகா கும்பமேளாவாக நடத்தப்படுகிறது. இந்நிகழ்வு அடுத்தாண்டு ஜனவரி 13ம் தேதி தொடங்கி பிப்ரவரி 26ம் தேதி வரை 45 நாட்கள் நடைபெறும் நிலையில், சுமார் 45 கோடி பேர் இந்நிகழ்வில் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிகழ்வை ஒட்டி 45 நாட்களுக்கு 13 ஆயிரம் சிறப்பு ரயில்கள் உத்தரபிரதேசம் வந்து செல்ல ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. வெளிநாடுகளில் இருந்தும் ஏராளமானோர் மகா கும்பமேளாவுக்கு வருகை தருவார்கள் என்பதால் கூடுதல் விமானங்களும் இயக்கப்படவுள்ளன.
மேலும், பக்தர்கள் வசதிக்காக 5 ஆயிரத்து 500 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள உத்தரபிரதேச அரசு, தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி மற்றும் முதலமைச்சர் ஸ்டாலின் ஆகியோர் விழாவில் பங்கேற்க அழைப்பு விடுத்துள்ளதாக தெரிவித்தார்.