பிச்சை எடுக்கிறவன் எல்லாம் பணக்காரனா இருக்கான் பாரு என்று திரைப்படத்தில் நகைச்சுவையாக சொல்லக் கேட்டிருப்போம். நிஜமாகவே பிச்சை எடுத்து, 7.5 கோடி சொத்துகளுடன் உலகின் மிகப் பெரிய பணக்கார பிச்சைக்காரராகி தமது குடும்பத்தைக் காப்பாற்றி இருக்கிறார் ஒருவர். ஆச்சரியமாக இருக்கிறது இல்லையா ? யார் அவர் ? பிச்சை எடுப்பதையே வெற்றிகரமான தொழிலாக அவர் எப்படி மாற்றினார் ? என்பது பற்றிய ஒரு செய்தி தொகுப்பு.
இந்தியாவின் முக்கியமான இரு நகரங்கள் என்றால் அது டெல்லியும் மும்பையும் தான். டெல்லி நாட்டின் தலைநகர் என்றால், மும்பை நாட்டின் வர்த்தக தலைநகரமாகும்.
இதில், மும்பையில் மிகவும் முக்கியமான இடங்களில் பிச்சை எடுப்பவர் தான் பாரத் ஜெயின். இவருக்கு இப்போது 54 வயதாகிறது. கடந்த 40 ஆண்டுகளாக பிச்சை எடுத்து வருகிறார்.
எப்போதும் பரபரப்பாக இருக்கும் சத்ரபதி சிவாஜி மகாராஜ் ரயில் நிலையம் மற்றும் ஆசாத் மைதானம் உள்ளிட்ட முக்கிய இடங்களில், விடாமல் நாள்தோறும் பாரத் ஜெயின் பிச்சை எடுத்து வருகிறார்.
பிச்சை எடுப்பதை ஒரு வேலையாக செய்யும் பாரத் ஜெயின் ஒரு நாளைக்கு பத்திலிருந்து பன்னிரண்டு மணி நேரம் இடைவேளையின்றி பணி செய்து வருகிறார். பிச்சை எடுப்பதால் பாரத் ஜெயின் ஒரு நாளைக்கு குறைந்த பட்சம் 2000 ரூபாயிலிருந்து, அதிக பட்சம் 2,500 ரூபாய் வரை சம்பாதிப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இப்படி, பிச்சை எடுப்பதன் மூலம், பாரத் ஜெயினின் மாத வருமானம் 75,000 ரூபாய் ஆகும். மேலும், மும்பையில் உள்ள தானேயில் இரண்டு கடைகளை வாடகைக்கு விடுவதன் மூலம் மாதந்தோறும் கூடுதலாக 30,000 ரூபாய் சம்பாதிக்கிறார் பாரத் ஜெயின்.
தனது மனைவி, இரண்டு மகன்கள், தந்தை மற்றும் சகோதரருடன் வசித்து வரும் பாரத் ஜெயினின் சொத்து மதிப்பு சுமார் 7.5 கோடி ரூபாய் ஆகும். தனது குடும்பத்திற்கு ஒரு உயர்தர வாழ்க்கையை கொடுத்திருக்கும் பாரத் ஜெயின் 1.4 கோடி ரூபாய் மதிப்புள்ள இரண்டு படுக்கை அறைகள் கொண்ட அடுக்குமாடி வீடு வைத்திருக்கிறார். தனது இரண்டு மகன்களையும் புகழ்பெற்ற ஒரு கான்வென்ட் பள்ளியில் படிக்க வைக்கிறார் பாரத் ஜெயின்.
வறுமையான குடும்பத்தில் பிறந்த பாரத் ஜெயினுக்குப் பண நெருக்கடியால்,பள்ளிக் கூடம் சென்று கல்வி கற்கும் வாய்ப்பில்லாமல் போனது. வறுமையின் பிடியில் சவாலான வாழ்க்கையைச் சமாளிக்க , கடுமையாக போராடி இருக்கிறார். ஒரு கட்டத்தில், பிச்சை எடுக்கும் தொழிலுக்கு வந்திருக்கிறார். விடாமுயற்சி மற்றும் புத்திசாலித்தனமான நிதி மேலாண்மை காரணமாக, இன்றைக்கு, உலகின் மிகப் பெரிய பணக்கார பிச்சைக்காரர் ஆகி உள்ளார்.
வாழ்வில் இந்தளவுக்கு உயர்ந்த பிறகு, தொடர்ந்து பிச்சை எடுப்பதைக் குடும்பத்தினர் முழுமையாக ஆதரிக்கவில்லை என்றாலும், பாரத் ஜெயின் பிச்சை எடுப்பதை ரசிப்பதாகவும், நிறுத்தப் போவதில்லை என்றும் தெரிவித்திருக்கிறார்.
தனது செல்வத்தைப் பதுக்கி வைப்பதற்குப் பதிலாக, சமூகத்திற்குத் திருப்பிக் கொடுப்பதைப் பாரத் ஜெயின் நம்புகிறார். வெற்றி என்பது பணத்தைக் குவிப்பது மட்டுமல்ல, பகிர்ந்து கொள்வதும் ஆகும் என்று சொல்லும் பாரத் ஜெயின், அடிக்கடி கோவில்களுக்கு நன்கொடை அளிப்பதும், தேவைப்படுபவர்களுக்கு உதவுவும் செய்கிறார்.
மும்பையில், பாரத் ஜெயின் போலவே, பல பணக்காரப் பிச்சைக்காரர்கள் இந்தியாவில் உள்ளனர் 2019ம் ஆண்டு ரயில் விபத்தில் இறந்து போன பிச்சைக்காரரான புர்ஜு சந்திர ஆசாத், வங்கி வைப்பு நிதியாக 8.77 லட்சம் ரூபாய் மற்றும் ரொக்கமாக சுமார் 1.5 லட்சம் வைத்திருந்தது குறிப்பிடத் தக்கது.
மேலும், 1.5 கோடி ரூபாய் மதிப்பில் சொத்து வைத்திருக்கும் சாம்பாஜி காலே மற்றும் 1 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்து வைத்திருக்கும் லக்ஷ்மி தாஸ் ஆகியோரும் பணக்கார பிச்சைக்காரர்களாக உள்ளனர்.
பிச்சை எடுப்பது அவமானம் அல்ல. வேலைக்குப் போவதை விட பிச்சை எடுப்பது சிறந்தது என்று பாரத் ஜெயின் நிரூபித்திருக்கிறார் என்றே சொல்ல வேண்டும்.