மத்திய அரசிடமிருந்து தமிழகத்திற்கு வழங்கப்படும் நிதியின் அளவு ஆண்டுக்கு ஆண்டு உயர்ந்து வருவது தெரியவந்துள்ளது. அண்மையில் வெளியான சி ஏ ஜி அறிக்கையில் தமிழக அரசுக்கு மத்திய அரசு ஒதுக்கிய நிதி மற்றும் மானியங்களின் விவரங்களை தற்போது பார்க்கலாம்.
மத்திய அரசிடமிருந்து மாநில அரசுக்கு நிதி வழங்கப்படுவது குறித்து விளக்கமான விவரங்கள் சி.ஏ.ஜி அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளன.
அந்த வகையில் தமிழகத்திற்கு 2018-19ம் ஆண்டில் 30 ஆயிரத்து 638 கோடி ரூபாயாக இருந்த மத்திய வரிகளின் பங்கு, 2019 -20 ஆம் ஆண்டில் 27 ஆயிரத்து 783 கோடியாக குறைந்து 2020-21 ஆம் ஆண்டில் 32 ஆயிரத்து 576 கோடியாக உயர்ந்திருப்பது தெரிய வந்துள்ளது.
தொடர்ந்து 2021-22 ஆம் ஆண்டில் 37 ஆயிரத்து 458 ரூபாயாக உயர்ந்த பங்கு, 2022-23 ஆம் ஆண்டில் 38 ஆயிரத்து 731 கோடியாக அதிகரித்துள்ளது. இதன் மூலம் ஆண்டுக்கு ஆண்டு உயர்ந்து வருவதோடு கடந்த 2022-23ஆம் ஆண்டில் மட்டும் ஆயிரத்து 273 கோடி ரூபாய் உயர்ந்திருப்பதும் சி ஏ ஜி அறிக்கையின் மூலம் தெரியவந்துள்ளது.
அதே போல, தமிழகத்திற்கு மத்திய அரசு வழங்கும் மானியங்களை பார்க்கும் போது 2018-19 ஆம் ஆண்டில் 23 ஆயிரத்து 368 கோடி ரூபாயாக இருந்த மானியம், 2019 – 20ம் ஆண்டில் 27 ஆயிரத்து 783 கோடி ரூபாயாகவும், 2020-21 ஆண்டில் 32 ஆயிரத்து 576 கோடி ரூபாயாகவும் உயர்ந்துள்ளது.
அதே மானியம் 2021-22ஆம் ஆண்டில் 37 ஆயிரத்து 458 கோடி ரூபாயாக உயர்ந்த நிலையில் அடுத்த ஆண்டான 2022-23 ஆம் ஆண்டில் 38 ஆயிரத்து 731 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. மேலும் மத்திய அரசின் மானியங்கள் முந்தைய ஆண்டை விட 7.66 சதவிகிதம் அதிகரித்திருப்பதையும் சி.ஏ.ஜி. அறிக்கை உறுதி செய்துள்ளது.
மத்திய அரசிடமிருந்து தமிழகத்திற்கு நிதி மாற்றம் தொடர்பாக சி.ஏ.ஜி அறிக்கையில் தெளிவாக விளக்கப்பட்டுள்ளன. அதன்படி 2018 -19 ஆம் ஆண்டில் 54 ஆயிரம் கோடி ரூபாயில் இருந்து 2019-20 ஆம் ஆண்டில் 54 ஆயிரத்து 175 கோடியாகவும், 2020-21 ஆம் ஆண்டில் 57 ஆயிரத்து 501 கோடியாகவும் அதிகரித்துள்ளது.
மேலும் அதே நிதி மாற்றம் 2021-22 ஆம் ஆண்டில் அதிகபட்சமாக 72 ஆயிரத்து 509 கோடியாக உயர்ந்த நிலையில், அடுத்த ஆண்டான 2022-23 ஆம் ஆண்டில் 76 ஆயிரத்து 465 கோடியாகவும் அதிகரித்துள்ளது. 2022-23 ஆம் ஆண்டில் மத்திய வரிகள் மற்றும் தீர்வைகளில் மாநிலத்தின் பங்காக மாற்றம் செய்யப்பட்ட தொகை 15வது நிதிக்குழு கணக்கிட்ட தொகையை விட கூடுதலாக இருந்திருப்பதும் தெரிய வந்துள்ளது.