நெல்லையில் வெள்ளநீர் கால்வாயில் திறந்துவிடப்பட்ட தண்ணீரை மீண்டும் ஆற்றுக்கே மர்மநபர்கள் திறந்து விட்டதால் பாசனத்திற்கு தண்ணீர் கிடைக்காமல் விவசாயிகள் அவதியடைந்தனர்.
நெல்லையில் பெய்த கனமழை காரணமாக தாமிரபரணி ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடியது. பாதுகாப்பு கருதி கால்வாயில் சுமார் 3 ஆயிரத்து 500 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டது. தினையூரணி தடுப்பணை முழு கொள்ளளவை எட்டிவிடும் என எதிர்பார்த்த நிலையில், மர்மநபர்கள் மீண்டும் ஆற்றுக்கே தண்ணீரை திறந்து விட்டுள்ளனர். இதனால் விவசாயத்திற்கு எதிர்பார்த்த தண்ணீர் கிடைக்காமல் விஜயநாராயணம், தினையூரணி உள்ளிட்ட பகுதியை சேர்ந்த விவசாயிகள் அவதியடைந்தனர்.
இதையடுத்து தடுப்பணையை ஆய்வு செய்த சபாநாயகர் அப்பாவு, ராதாபுரம் சுற்றுவட்டார பகுதிகளுக்கு தண்ணீர் செல்வதற்கான மதகை மலர் தூவி திறந்து வைத்தார். தொடர்ந்து பேசிய அவர், மர்ம நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தார்.