மேட்டூர் அனல்மின் நிலையத்தில் நிகழந்த விபத்துக்கு அதிகாரிகளின் மெத்தனப்போக்கே காரணம் என சட்டமன்ற உறுப்பினர் சதாசிவம் குற்றம்சாட்டியுள்ளார்.
சேலம் மாவட்டம், மேட்டூர் அனல்மின் நிலையத்தின் 2-ம் அலகில் நிலக்கரி பெட்டி உடைந்து விழுந்த விபத்தில் 2 பேர் உயிரிழந்த நிலையில், 5 பேர் படுகாயமடைந்தனர். இந்த சம்பவத்தைக் கண்டித்து பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட நிலையில், போலீசார் நடத்திய சமாதான பேச்சுவார்த்தையை அடுத்து அவர்கள் கலைந்து சென்றனர்.
பின்னர் மேட்டூர் அனல்மின் நிலைய வளாக சாலையில் செய்தியாளர்களிடம் பேசிய எம்எல்ஏ சதாசிவம், மேட்டூர் அனல்மின் நிலைய அதிகாரிகள் முறைகேட்டில் ஈடுபட்டுள்ளதாக குற்றம்சாட்டியுள்ளார்.
பராமரிப்பு செய்ததாக கூறி பல கோடி ரூபாயை மோசடி செய்துள்ளதாகவும், முறையான பராமரிப்பு பணி மேற்கொள்ளாததால் நிலக்கிரி பெட்டி உடைந்து விபத்து ஏற்பட்டதாகவும் புகார் கூறினார்.
அனல்மின் நிலையத்தில் இருந்து வெளியேறும் புகையால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகி வருவதாக கூறியுள்ள அவர், தமிழக அரசு முறையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்.