பல்கலைக்கழக துணைவேந்தர் தேடுதல் குழு அறிவிக்கையைத் திரும்ப பெறுமாறு தமிழக அரசுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி அறிவுறுத்தியுள்ளார்.
சென்னை அண்ணா பல்கலைக்கழகம், திருச்சி பாரதிதாசன் மற்றும் சேலம் பெரியார் பல்கலைக்கழகங்களுக்கு துணைவேந்தரை நியமிப்பதற்காக தமிழக அரசு தேடுதல் குழுவை அமைத்தது.
ஆளுநர், அரசு மற்றும் பல்கலைக்கழக செனட் பிரதிநிதிகள் அடங்கிய அந்தக் குழுவில், யுஜிசி பிரதிநிதி இடம்பெறாததற்கு ஆளுநர் ஆர்.என்.ரவி ஆட்சேபம் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக ஆளுநர் மாளிகை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், பல்கலைக்கழக மானியக் குழு தலைவரின் பிரதிநிதி இல்லாமல் அமைக்கப்படும் எந்தவொரு தேடுதல் குழுவும் நீதிமன்றத்தால் நிராகரிக்கப்படலாம் என குறிப்பிட்டுள்ளார்.
உதாரணமாக சில வழக்குகளை மேற்கோள் காட்டிய ஆளுநர், துணைவேந்தர் தேடுதல் குழு தொடர்புடைய அறிவிக்கையை உடனடியாக திரும்ப பெற்று, யுஜிசி பிரதிநிதியையும் சேர்த்து புதிதாக அறிவிக்கை வெளியிடுமாறு தமிழக அரசுக்கு அறிவுறுத்தியுள்ளார்.