உலகின் மிகப்பெரிய நீர்மின் உற்பத்தி செய்யும் பிரமாண்ட அணையைக் கட்ட சீனா திட்டமிட்டுள்ளதால் இந்தியா மற்றும் வங்கதேச நாடுகளுக்கு பாதிப்பு ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.
திபெத்தில் உள்ள கயிலாய மலையில் உருவாகும் ஜாங்க்போ நதி சீனா, இந்தியா, வங்கதேசம் ஆகிய நாடுகள் வழியாக பாய்கிறது. இந்திய எல்லையான அருணாச்சலப்பிரதேசத்தில் நுழையும்போது பிரம்மபுத்திரா நதி என்று அழைக்கப்படும் இந்த நதி, அசாம் மாநிலத்தை கடந்து வங்கதேசத்துக்குள் நுழைகிறது.
சீனாவின் கட்டுப்பாட்டில் உள்ள திபெத்தில் ஓடும் யார்லாங் ஜாங்க்போ நதியில் பிரமாண்டமான அணையை கட்ட 2020ம் ஆண்டு திட்டமிடப்பட்டது.
மிகவும் சிக்கலான வடிவமைப்பு காரணமாக திட்டம் தாமதமாகி வந்த நிலையில், தற்போது திட்டத்தை செயல்படுத்த சீனா முடிவு செய்துள்ளது.
சீனா புதிய அணையை கட்டுவதால் பிரம்மபுத்திரா நதி மொத்தமும் சீனா கட்டுப்பாட்டுக்குள் சென்றுவிடும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
அருணாச்சலப்பிரதேசம், அசாம் மாநிலங்கள் பிரம்மபுத்திரா நதியை நம்பியுள்ள நிலையில், நீரின்றி நதி வறண்டால் இரு மாநில மக்களின் பொருாளதாரம் கடுமையாக பாதிக்கப்படும் என்றும், அதேபோல, மொத்த நீரையும் சீனா திறந்துவிட்டால், அசாம், அருணாச்சலப்பிரேதச மாநிலங்கள் மட்டுமின்றி வங்கதேசமும் வெள்ளத்தால் அழிந்துவிடும் எனவும் வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.