நீலகிரி மாவட்டம் பந்தலூர் அருகே குடியிருப்பு பகுதிக்குள் நுழைந்து 10 நாட்களுக்கும் மேலாக போக்கு காட்டிய, புல்லட் ராஜா என பெயரிடப்பட்ட யானையை மயக்க ஊசி செலுத்தி வனத்துறையினர் பிடித்தனர்.
பந்தலூர் அருகே சேரங்கோடு மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் குடியிருப்புகளை சேதப்படுத்தி, விளை நிலங்களை நாசப்படுத்திய புல்லட் ராஜா என்ற யானையை பிடிக்கும் பணியில் வனத்துறையினர் மும்முரமாக ஈடுபட்டனர்.
இதற்காக பொம்மன் மற்றும் சீனிவாசன் ஆகிய இரண்டு கும்கி யானைகள் வரவழைக்கப்பட்ட நிலையில், தேயிலை தோட்ட பகுதியில் முகாமிட்டிருந்த புல்லட் ராஜாவிற்கு கால்நடை மருத்துவர்கள் மயக்க ஊசி செலுத்தினர்.
எனினும், அந்த யானை கட்டுக்குள் வராத காரணத்தால், மீண்டும் 2-வது முறையாக மயக்க ஊசி செலுத்தி கும்கி யானைகள் உதவியிடன் பிடித்தனர். பிடிபட்ட யானையின் உடல் நிலை குறித்து வனத்துறையினர் தீவிரமாக கண்காணித்து வரும் நிலையில், யானைகள் வளர்ப்பு முகாமிற்கு சென்று பராமரிக்கலாமா என்றும் வனத்துறையினர் ஆலோசித்து வருகின்றனர்.