போதைப்பொருள் வழக்கில் கைது செய்யப்பட்ட நடிகர் மன்சூர் அலிகான் மகன் அலிகான் துக்ளக்கின் ஜாமின் மனுவை, சென்னை போதைப்பொருள் தடுப்பு சிறப்பு நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
சென்னை முகப்பேர் பகுதியில் உள்ள தனியார் கல்லூரி மாணவர்களுக்கு போதைப்பொருட்கள் விற்பனை செய்த வழக்கில் 5 பேர் கைது செய்யப்பட்டனர்.
கைது செய்யப்பட்டவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையின் அடிப்படையில், போதைப்பொருள் வழக்கில் தொடர்பிருப்பதாக நடிகர் மன்சூர் அலிகான் மகன் அலிகான் துக்ளக்-கை போலீசார் கைது செய்தனர்.
இந்த வழக்கில் அலிகான் துக்ளக் தரப்பில் ஏற்கெனவே அம்பத்தூர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட ஜாமின் மனு தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில், அவர் மீண்டும் ஜாமின் கோரி போதைப்பொருள் தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.
அந்த மனுவில், தான் கைது செய்யப்பட்டபோது தன்னிடம் போதைப்பொருட்கள் எதுவும் இல்லை எனவும், இவ்வழக்கில் தனக்கு எந்தவித தொடர்பும் இல்லை என்றும் அலிகான் துக்ளக் தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
மேலும், தனக்கு ஜாமின் வழங்கினால் நீதிமன்றம் விதிக்கும் நிபந்தனைகளுக்கு கட்டுப்பட்டு நடக்க தயாராக இருப்பதாகவும் மனுவில் கூறப்பட்டிருந்தது. இந்த மனு, நீதிபதி கோவிந்தராஜன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தபோது, காவல்துறை தரப்பில் விசாரணை நடந்து வருவதால் குற்றம் சாட்டப்பட்டவருக்கு ஜாமின் வழங்க கூடாது என வாதிடப்பட்டது.
காவல்துறை தரப்பு வாதத்தை ஏற்றுக்கொண்ட நீதிபதி, அலிகான் துக்ளக்கின் ஜாமின் மனுவை தள்ளுபடி செய்தார்.