சிதம்பரம் அருகே கோபுர கலசத்தில் இரிடியம் உள்ளதாகக் கூறி பண மோசடி மற்றும் திருட்டில் ஈடுபட்ட இளைஞரை போலீசார் கைது செய்துள்ளனர். இதுபற்றிய ஒரு செய்தித் தொகுப்பை தற்போது காணலாம்…
இரிடியம் எளிதில் காணக்கிடைக்காத உலோகம். இது வீட்டில் இருந்தால் செல்வம் செழிக்கும், இரிடியத்தை வாங்கி வெளிநாட்டில் விற்றால் கோடிகளில் புரளலாம் போன்ற ஆசை வார்த்தைகளை நம்பி லட்சத்தில் பணத்தை பறிகொடுத்தவர்கள் ஏராளம்.
சதுரங்க வேட்டை படத்திலும் இதே பாணியில் ஒரு கும்பல் பணம் படைத்தவர்களை அணுகி, கோபுர கலசம், அரிசி போன்றவற்றால் சித்து வேலைகளை காட்டி, பண மோசடியில் ஈடுபடும் காட்சிகளை நாம் கட்டாயம் பார்த்திருப்போம்…
இதே டெக்னிக்கை பயன்படுத்தி கடலூர் மாவட்டம், சிதம்பரம் பகுதியில் பண மோசடி மற்றும் கார் திருட்டு போன்ற சம்பவங்களில் ஈடுபட்டு வந்த டிப்டாப் இளைஞரை போலீசார் கைது செய்துள்ளனர்.
அண்ணாமலையார் நகர் பகுதியைச் சேர்ந்த விக்னேஷ் தனியார் ஆம்புலன்ஸ் ஓட்டுநராக பணியாற்றி வரும் நிலையில், அவருக்கு அறிமுகமான ராஜு என்கிற ராஜசேகர் என்பவர் தன்னிடம் இரு கோபுர கலசங்கன் இரிடியம் இருப்பதாக கூறியுள்ளார்.
ஒரு கலசத்திற்கு 5 லட்சம் வீதம் 10 லட்சம் ரூபாய் கொடுத்தால், இரிடியத்தையும், அதனுடன் அதிர்ஷ்டத்தையும் வீட்டிற்கு கொண்டு செல்லலாம் என விக்னேஷிடம் பல ஆசை வார்த்தைகளை அள்ளி விட்டுள்ளார்.
அப்போது தனது பட்ஜெட்டுக்கு 10 லட்சமெல்லாம் ஜாஸ்தி எனக்கூறி விக்னேஷ் நழுவப் பார்க்க, அவரை மிரட்டி 10 ஆயிரம் ரூபாயை பறித்துக்கொண்டு அனுப்பியுள்ளார் ராஜு. பாதிக்கப்பட்ட விக்னேஷ் அளித்த புகாரின் பேரில் விசாரணை நடத்திய போலீசார், காரில் இரு கோபுர கலசங்களுடன் சென்ற நபரை வாகன சோதனையின்போது மடக்கி பிடித்தனர்.
டிப்டாப் உடையில் சிக்கிய அவரிடம் போலீசார் நடத்திய விசாரணையில், இரிடியம் வாங்கி விற்றால் கோடீஸ்வரன் ஆகிவிடலாம் என்ற பேராசையால் மற்றொரு நபரிடம் ராஜு 8 லட்சம் ரூபாயை இழந்தது தெரியவந்தது. அதே மோசடியை பயன்படுத்தி பண மோசடியில் ஈடுபட திட்டமிட்ட ராஜு, நவீன முறையில் காந்த துகள்களை அரிசியில் தடவி, இரும்பு கலசத்தில் சாயம் பூசி அது அரிசியை ஈர்ப்பது போல் வீடியோ எடுத்து இணையத்தில் பதிவிட்டுள்ளார்.
அதனை நம்பி அவரை அணுகிய பணம் படைத்தவர்களை தனியார் ஹோட்டல் அறைகளுக்கு வரவழைத்து, ஆசை வார்த்தைகள் கூறி அவர்களிடம் இருந்து லட்சக் கணக்கில் பண மோசடி செய்வதும், அவர்களுக்கு மது வாங்கிக்கொடுத்து அசந்த நேரத்தில் அவர்களின் காரை திருடிச் செல்வது போன்ற செயல்களில் ஈடுபட்டு வந்தது போலீசாருக்கு தெரியவந்தது.
இரிடியம் மோசடிகள் தமிழகத்தில் தொடர்கதையாகி வரும் நிலையில், இதுபோன்ற மோசடி நபர்களின் ஆசை வார்த்தைகளுக்கு மயங்குவதை பொதுமக்கள் கைவிட வேண்டும் என போலீசார் எச்சரித்துள்ளனர்.