திமுக எம்பிக்கு அ.ராசாவுக்கு எதிரனக வழக்கு விசாரணையை வரும் ஜனவரி 23-ம் தேதிக்கு ஒத்திவைத்து சென்னை சிபிஐ சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
திமுக எம்பி ஆ.ராசா வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக கடந்த 2015-ம் ஆண்டில் சிபிஐ வழக்குப்பதிவு செய்தது.
மேலும் சட்டவிரோதமாக பணப்பரிமாற்றம் செய்ததாக ஆ.ராசா, அவரது நண்பர்கள் கிருஷ்ணமூர்த்தி, என்.ரமேஷ், விஜய் சடரங்கனி ஆகியோர் மீது அமலாக்கத்துறை வழக்கு தொடர்ந்தது.
சென்னை சிபிஐ நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள இந்த வழக்கில், கூடுதல் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யும் வரை குற்றச்சாட்டுப்பதிவு உள்ளிட்ட எந்த நடவடிக்கையும் தொடங்க கூடாது என அ.ராசாவின் நண்பர்கள் தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இதற்கு அமலாக்கத்துறை தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட பதில் மனுவில், திமுக எம்பி அ.ராசா மற்றும் அவரின் நண்பர்களுக்கு எதிராக அமலாக்கதுறை தொடர்ந்த வழக்கில் குற்றச்சாட்டு பதிவை தள்ளி வைக்க கூடாது என கோரிக்கை விடுக்கப்பட்டது.
விசாரணையை தாமதப்படுத்தும் நோக்கில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளதால் அ.ராசாவின் மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் எனவும் அமலாக்கத்துறை தெரிவித்திருந்தது.
இந்த வழக்கை விசாரித்த சென்னை சிபிஐ சிறப்பு நீதிமன்ற நீதிபதி எழில் வேலவன், அமலாக்கத்துறை தாக்கல் செய்த பதில் மனுவின் மீது வாதங்களை வைப்பதற்காக வழக்கின் விசாரணை ஜனவரி 23ம் தேதிக்கு ஒத்தி வைத்தார்.
















