தரையிலிருந்து நடுத்தர தொலைவு வான் இலக்குகளை தாக்கி அழிக்கும் திறன் கொண்ட MRSAM ஏவுகணைகளை, இந்திய கடற்படைக்காக ₹ 2960 கோடி மதிப்பில் உருவாக்க, பாதுகாப்பு அமைச்சகம், பாரத் டைனமிக்ஸ் நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்துள்ளது.
இந்திய கடற்படைக்கு மேற்பரப்பில் இருந்து நடுத்தர தூர வான் ஏவுகணைகளை (எம்ஆர்எஸ்ஏஎம்) வழங்குவதற்காக பாரத் டைனமிக்ஸ் லிமிடெட் (பிடிஎல்) நிறுவனத்துடன் சுமார் ரூ. 2,960 கோடி மதிப்பில் பாதுகாப்பு அமைச்சகம் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது.
புதுதில்லியில் இன்று பாதுகாப்புச் செயலாளர் ராஜேஷ் குமார் சிங் முன்னிலையில் பாதுகாப்பு அமைச்சக அதிகாரிகளும் பிடிஎல் நிறுவன அதிகாரிகளும் இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.
எம்ஆர்எஸ்ஏஎம் ஏவுகணை அமைப்பு ஒரு நிலையான அமைப்பாகும். தற்போது வாங்க கையெழுத்திடப்பட்டுள்ள ஏவுகணைகள் வருங்கால கப்பல்களில் பொருத்த திட்டமிடப்பட்டுள்ளது.
இந்த ஒப்பந்தம் இந்தியாவின் பாதுகாப்பு திறன்களை மேம்படுத்துவதற்கும், மேம்பட்ட ராணுவ தொழில்நுட்பத்தை உள்நாட்டு மயமாக்குவதற்கும் நடந்து வரும் முயற்சிகளில் ஒரு முக்கியமான மைல்கல்லைக் குறிப்பதாக அமைந்துள்ளது.
தற்சார்பு இந்தியா என்ற கருத்தை வலியுறுத்தி, இந்த ஏவுகணைகள் பெரும்பாலும் உள்நாட்டு உள்ளடக்கத்துடன் பிடிஎல் நிறுவனத்தால் உருவாக்கப்படும். இந்த ஒப்பந்தம் பல்வேறு குறு,சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் உட்பட பாதுகாப்புத் துறையில் வேலைவாய்ப்பை உருவாக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.