ஆந்திராவில் நடைபெற்ற சேவல் சண்டையில், சண்டையிடாத சேவலுக்கு ஒரு கோடி ரூபாய் பரிசு கிடைத்த சம்பவம் வியப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஆந்திராவில் சங்கராந்தி பண்டிகையையொட்டி கோதாவரி மாவட்டத்தில் உள்ள என்.டிஆர், கிருஷ்ணா, ஏலூரூ உள்ளிட்ட மாவட்டங்களில் சேவல் சண்டை நடைபெற்றது. 3 நாட்களாக நடைபெற்ற சேவல் சண்டை சூதாட்டங்களில் ஆயிரத்து 500 கோடி ரூபாய் பந்தயம் கட்டப்பட்டதாக கூறப்படுகிறது.
பீமாவரம் பகுதியில் நடந்த சேவல் சண்டையில், 5 சேவல்கள் கலந்து கொண்டன. இதில், நான்கு சேவல்கள் போட்டியிட்ட நிலையில், ஒரு சேவல் போட்டியில் பங்கேற்காமல் ஒதுங்கி நின்றது.
போட்டியில் கலந்து கொண்ட 4 சேவல்களில் 3 சேவல்கள் அடுத்தடுத்து உயிரிழந்த நிலையில் உயிர் பிழைத்த மற்றொரு சேவலுடன், ஆரம்பத்தில் இருந்து ஒதுங்கி நின்ற சேவல் சண்டையிடும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால், உயிர் பிழைத்த சேவல் சில நொடிகளில் சரிந்து விழுந்து இறந்ததால் சண்டையிடாத சேவல் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. அந்த சேவலுக்கு ஒரு கோடியே 25 லட்சம் ரூபாய் பரிசு அறிவிக்கப்பட்டது.