சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூர் அருகே நடைபெற்ற மஞ்சுவிரட்டு போட்டியை காண சென்ற 16 வயது சிறுவனை பாம்பு கடித்த நிலையில் அந்த பாம்பை அடித்துக்கொன்று கையோடு கொண்டு வந்து சிறுவன் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட சம்பவம் பெறும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
புதுக்கோட்டை மாவட்டம் கோனாபட்டு கிராமத்தைச் சேர்ந்தவர் பழனியப்பன். இவரது 15 வயது மகன் ராமன். இவர்கள் தங்களது குடும்பத்துடன் திருப்பத்தூர் அருகே உள்ள கிராமத்திற்கு பொங்கல் விழாவிற்காக விருந்தினராக சென்றுள்ளனர்.
இந்நிலையில் திருப்பத்தூரை அடுத்த சிராவாயல் கிராமத்தில் மஞ்சுவிரட்டு நடப்பதை கண்டு களிக்க சிறுவன் ராமன் தனது நண்பர்களுடன் சென்றதாக கூறப்படுகிறது. அங்குள்ள பொட்டல் பகுதியில் நின்று அவிழ்த்து விடப்பட்ட காளைகளை பார்த்துக் கொண்டிருந்த பொழுது சிறுவன் ராமனை பாம்பு கடித்ததாக கூறப்படுகிறது.
இதனையடுத்து உடன் இருந்த அவரது நண்பர்கள் அந்த பாம்பை அடித்ததுடன் அதை கையில் எடுத்துக் கொண்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு சிறுவன் ராமனை சிகிச்சைக்காக அழைத்து சென்றனர்.
திருப்பத்தூர் மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக சிவகங்கை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு சிறுவன் அனுப்பிவைக்கப்பட்டார். மஞ்சுவிரட்டு பார்க்க சென்ற சிறுவன் பாம்பு கடித்து மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.