பெரம்பலூர் அருகே பட்டியல் சமூகத்தை சேர்ந்த இளைஞர் வெட்டி கொல்லப்பட்ட விவகாரம் தொடர்பாக காவல் நிலையத்தின் ஜன்னல் கண்ணாடிகள் அடித்து நொறுக்கப்பட்ட நிலையில், சம்பவ இடத்தில் திருச்சி டிஐஜி வருண்குமார் நேரில் ஆய்வு செய்தார்.
பெரம்பலூர் மாவட்டம், கை.களத்தூர் பகுதியில் பொங்கல் பண்டிகையையொட்டி விளையாட்டுப் போட்டி நடத்தப்பட்டது. இதில் பட்டியல் சமூகத்தைச் சேர்ந்த மணிகண்டன் என்பவர் கலந்து கொண்ட நிலையில், தேவேந்திரன் என்பவருடன் தகராறு ஏற்பட்டுள்ளது. இருவருக்கும் ஏற்கனவே முன்விரோதம் இருந்து வந்த நிலையில், மணிகண்டனை, தேவேந்திரன் வெட்டிக் கொலை செய்ததாகக் கூறப்படுகிறது.
இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்த கை.களத்தூர் போலீசார், தேவேந்திரனை கைது செய்தனர். இந்நிலையில் கை.களத்தூர் காவல் நிலையத்தை உயிரிழந்த மணிகண்டனின் உறவினர்கள் 500-க்கும் மேற்பட்டோர் முற்றுகையிட்டனர். மேலும், கைது செய்யப்பட்ட தேவேந்திரனை வெளியே விடுங்கள், நாங்கள் பார்த்துக் கொள்கிறோம் எனவும் கூறி அவர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அப்போது காவல் நிலையத்தின் ஜன்னல் கண்ணாடிகளை மணிகண்டனின் உறவினர்கள் அடித்து நொறுக்கினர்.
இதனை தொடர்ந்து காவல் நிலையம் முன்பு போலீசார் குவிக்கப்பட்டதால் பதற்றம் நிலவியது. இந்நிலையில் தாக்குதல் குறித்து தகவலறிந்த திருச்சி டிஐஜி வருண்குமார், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆதர்ஷ் பசேரா உள்ளிட்டோர் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கு ஆதரவாக வந்த விசிக நிர்வாகிகள் உள்ளிட்டோருடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.
அப்போது உயிரிழந்த மணிகண்டனின் மனைவிக்கு அரசு வேலை கிடைக்க வழிவகை செய்வதுடன், மேலும் இருவர் மீது வழக்குப்பதிவு செய்யப்படும் எனவும் அதிகாரிகள் தரப்பில் உறுதியளிக்கப்பட்டது. இதனையடுத்து சுமார் 7 மணி நேரத்திற்கு பிறகு போராட்டம் வாபஸ் பெறப்பட்டது.