சென்னை கடற்கரை பகுதிகளில் கடல் ஆமைகள் அதிகளவில் இறந்து கரை ஒதுங்குவதற்கு என்ன காரணம் என்பது குறித்து தமிழக அரசு விளக்கம் அளிக்க வேண்டும் என தென்மண்டல தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை கடற்கரை பகுதிகளில் கடல் ஆமைகள் அதிகளவில் இறந்து கரை ஒதுங்குவது தொடர்பாக தென்மண்டல பசுமை தீர்ப்பாயம் தாமாக முன்வந்து வழக்கு தொடர்ந்தது.
இந்த வழக்கு தென்மண்டல பசுமை தீர்ப்பாய உறுப்பினர் புஷ்பா சத்திய நாராயணா மற்றும் தொழில்நுட்ப உறுப்பினர் சத்யகோபால் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, மெரினா கடற்கரையில் கடல் ஆமைகள் இறந்து ஒதுங்குவதற்கு யார் பொறுப்பு என கேள்வி எழுப்பிய பசுமை தீர்ப்பாயம், மீனவர்கள் பயன்படுத்தும் ஒரு குறிப்பிட்ட வலைதான் இதற்கு காரணமா எனவும் கேள்வி எழுப்பியது.
அதற்கு பதிலளித்து தமிழக அரசு தரப்பு, ஏற்கனவே இது தொடர்பான வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் நிலுவையில் இருப்பதாக தெரிவித்தது.
இதுதொடர்பாக நிரந்தர வழிகாட்டு விதிமுறைகள் இருந்தும் ஏன் அமல்படுத்தப்படவில்லை என கேள்வி எழுப்பிய பசுமை தீர்ப்பாயம், கடல் ஆமைகள் அதிகளவில் இறந்து கரை ஒதுங்குவதற்கு என்ன காரணம் என்பது குறித்து தமிழக அரசு விளக்கமளிக்க வேண்டும் என உத்தரவிட்டு, வழக்கு விசாரணையை தென்மண்டல பசுமை தீர்ப்பாயம் ஒத்திவைத்தது.