காணும் பொங்கலுக்கு அரசு விடுமுறை அறிவிக்கக் கூடாது என்று தமிழக அரசுக்கு பரிந்துரைக்க உள்ளதாக தென்மண்டல பசுமை தீர்ப்பாயம் தெரிவித்துள்ளது.
காணும் பொங்கல் அன்று மெரினா கடற்கரையை குப்பை கூளமாக்கிய விவகாரம் தொடர்பாக தென்மண்டல பசுமைத் தீர்ப்பாயம் தாமாக முன்வந்து வழக்கு தொடர்ந்தது.
இந்த வழக்கு தென்மண்டல பசுமைத் தீர்ப்பாய நீதித்துறை உறுப்பினர் நீதிபதி புஷ்பா சத்திய நாராயணா மற்றும் நிபுணத்துவ உறுப்பினர் சத்தியகோபால் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது.
அப்போது நீதிபதி புஷ்பா சத்திய நாராயணா, காணும் பொங்கல் அன்று மெரினா கடற்கரையை குப்பை கூளமாக்கியது குறித்து கேள்வி எழுப்பினார். கடற்கரையை எப்படி பாதுகாப்பது என்று மக்களுக்கு தெரியவில்லை என வேதனை தெரிவித்த தீர்ப்பாயம், காணும் பொங்கலுக்கு விடுமுறை அறிவிக்க கூடாது என அரசுக்கு பரிந்துரைக்க உள்ளதாகவும் தெரிவித்தது.
அதற்கு அரசுத் தரப்பில், அபராதம் விதிக்காவிட்டால் குப்பை கொட்டுவதை தடுக்க முடியாது எனவும், படித்தவர், படிக்காதவர் என அனைவரும் வித்தியாசமின்றி குப்பைகளை வீசிச் செல்வதாகவும் தெரிவிக்கப்பட்டது.
இதனை அடுத்து, குப்பை கொட்டுபவர்களுக்கு உடனடி அபராதம் விதிக்கும் வகையில் சிறப்பு படைகளை அமைக்க வேண்டும் என ஆணையிட்ட தீர்ப்பாயம், இது சம்பந்தமாக சென்னை மாநகராட்சி, மாசு கட்டுப்பாட்டு வாரியம் பதிலளிக்க வேண்டும் என உத்தரவிட்டது.