கொல்கத்தா பெண் மருத்துவர் கொலை வழக்கில் குற்றவாளி என தீர்ப்பளிக்கப்பட்ட போலீஸ் தன்னார்வலர் சஞ்சய் ராய்க்கு சாகும் வரை ஆயுள் தண்டனை விதித்து சிபிஐ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
கொல்கத்தா ஆர்ஜி கர் அரசு மருத்துவமனையில் பயிற்சி பெற்று வந்த முதுநிலை மருத்துவ மாணவி, கடந்த ஆண்டில் பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் நாட்டையே உலுக்கியது.
இதுதொடர்பாக அதே மருத்துவமனை வளாகத்தில் அமைந்துள்ள காவல் நிலையத்தில் தன்னார்வலராக பணியாற்றி வந்த சஞ்சய் ராயை போலீஸார் கைது செய்தனர்.
இதுதொடர்பான வழக்கை விசாரித்த கொல்கத்தா சிபிஐ நீதிமன்றம், சஞ்சய் ராயை குற்றவாளி என தீர்ப்பளித்தது.
இந்நிலையில், இதை அரிதினும் அரிதான வழக்கு அல்ல என்று கூறி இன்று தண்டனை அறிவித்த நீதிபதி, குற்றவாளி சஞ்சய் ராய்க்கு சாகும் வரை ஆயுள் தண்டனையும், 50 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார்.
மேலும், உயிரிழந்த பெண் மருத்துவரின் குடும்பத்தினருக்கு 17 லட்ச ரூபாய் இழப்பீடு வழங்க மேற்கு வங்க அரசுக்கு நீதிபதி உத்தரவிட்டார்.
முன்னதாக, தன் மீது எந்தத் தவறும் இல்லை என்றும், வழக்கில் தாம் சிக்கவைக்கப்பட்டதாகவும் சஞ்சய் ராய் மன்றாடிய நிலையில், அதை நீதிபதி ஏற்க மறுத்தார்.