இன்ஸ்டாகிராம் மூலம் சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக எழுந்த புகாரில் இளைஞர் ஒருவரை சைபர் கிரைம் போலீசார் கைது செய்தனர்.
புதுச்சேரியை சேர்ந்த 16 வயது சிறுமி பேஸ்புக், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைதளங்களை பயன்படுத்தி வந்த நிலையில், அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்திற்கு அடையாளம் தெரியாத இளைஞர் நட்புக்கான அழைப்பு கொடுத்துள்ளார். இதனை சிறுமி ஏற்றுக் கொண்ட நிலையில், கடந்த சில நாட்களாக ஆசை வார்த்தை கூறி வந்த இளைஞர், ஒருகட்டத்தில் சிறுமியை காதலிப்பதாகவும், தன்னுடன் வரவேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார்.
இது குறித்து சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில் சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். அதில், சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்தது மன்னார்குடியை சேர்ந்த முஜீப் அலி என்றும், இன்ஸ்டாகிராமில் போலி கணக்குகள் வைத்து பல பெண்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததும் தெரியவந்தது.
இதனை தொடர்ந்து முஜீப் அலியை கைது செய்த போலீசார், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இதனிடையே, இளம்பெண்கள் சமூக வலைதளங்களில் அடையாளம் தெரியாத நபர்களின் நட்பு அழைப்புகளை ஏற்க வேண்டாம் என சைபர் க்ரைம் கண்காணிப்பாளர் பாஸ்கர் தெரிவித்துள்ளார்.