மகா கும்பமேளாவுக்கு பிரதமர் நரேந்திர மோடி பிப்ரவரி 5 ஆம் தேதி செல்கிறார் . மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா வருகின்ற 27-ம் தேதி இதில் கலந்து கொள்கிறார் .
12 ஆண்டுகளுக்கு ஒரு முறை மகா கும்பமேளா கொண்டாடப்படுகிறது. இந்த மகா கும்பமேளா விழா உத்தர பிரதேசத்தின் பிரயாக்ராஜில் கடந்த 13-ம் தேதி தொடங்கி அடுத்த மாதம் 26-ம் தேதி வரை நடைபெறுகிறது.
பவுஸ் பூர்ணிமா தினத்தில் தொடங்கிய மகா கும்பமேளாவின் முதல் நாளில் புனித நீராடல் நிகழ்ச்சி தொடங்கியது. அன்றைய தினம் கோடிக்கணக்கான பக்தர்கள் புனித நீராடினர். மேலும் பல்வேறு மாநிலத்தில் இருந்து தினம் தோறும் லட்சக்கணக்கான மக்கள் வருகிறார்கள்.
இந்நிலையில் பிரதமர் நரேந்திர மோடி பிப்ரவரி 5 ஆம் தேதியும், குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு பிப்ரவரி 10 ஆம் தேதியும், துணை குடியரசுத் தலைவர் ஜக்தீப் தன்கர் பிப்ரவரி 1ம் தேதியும், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா வருகின்ற 27-ம் தேதியும் இதில் கலந்து கொள்ள உள்ளார்கள்.
இவர்களின் வருகையை முன்னிட்டு பாதுகாப்பு நடவடிக்கைகள் பலப்படுத்தப்பட்டு வருகின்றன.