சென்னையில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வீட்டை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட ஈவெரா அமைப்பினர் கைது செய்யப்பட்டனர்.
ஈவெரா குறித்து அவதூறாக பேசியதாக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வீட்டை முற்றுகையிடப் போவதாக, திராவிடர் கழகம், திராவிடர் விடுதலைக் கழகம், மே 17 இயக்கம் உள்ளிட்ட 30-க்கும் மேற்பட்ட அமைப்பினர் அறிவித்திருந்தனர்.
இதையடுத்து சென்னை நீலாங்கரையில் உள்ள சீமான் வீடு முன் 200-க்கும் மேற்பட்ட போலீஸார் குவிக்கப்பட்டனர். சீமான் வீட்டின் முன் நாம் தமிழர் கட்சி நிர்வாகிகளும் குவிந்தனர்.
இந்த நிலையில், சீமான் வீட்டின் முன் திரண்டு ஈவெரா அமைப்பினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் அங்கு பதற்றமான சூழல் உருவானது. இதையடுத்து அவர்களை போலீஸார் கைது செய்து அழைத்துச் சென்றனர்.