ஊதிய உயர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திருப்பூரில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட போக்குவரத்து ஊழியர்களை போலீசார் கைது செய்தனர்.
தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தில் பணியாற்றும் ஊழியர்களுக்கான ஊதிய ஒப்பந்தம் முடிந்து ஓராண்டுக்கு மேலாகியும் ஒப்பந்தத்தை புதுப்பிக்காமல், பணப்பலன் வழங்காததை கண்டித்தும், அகவிலைப்படி உயர்வு மறுக்கப்பட்டுள்ளதை மீண்டும் வழங்க வலியுறுத்தியும் தமிழகம் முழுவதும் சிஐடியு சார்பில் சிறை நிரப்பும் போராட்டம் நடைபெற்றது.
திருப்பூர் பழைய பேருந்து நிலையம் முன்பு, மண்டல பொதுச்செயலாளர் செல்லதுரை தலைமையில் நடைபெற்ற போராட்டத்தில் 200க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். பேருந்துகளை சிறைபிடித்த போராட்டக்காரர்களை போலீசார் கைது செய்து தனியார் மண்டபத்தில் அடைத்தனர்.
இதேபோன்று, காஞ்சிபுரம் பேருந்து நிலையம் முன்பு 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட 150க்கும் மேற்பட்ட போக்குவரத்து தொழிலாளர்களை போலீசார் கைது செய்து மண்டபத்தில் அடைத்தனர்.
சேலம் மாவட்டம் மெய்யனூர் பணிமுனை முன்பு சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட போக்குவரத்து தொழிலாளர்களை போலீசார் குண்டுக்கட்டாக தூக்கிச் சென்று கைது செய்தனர்.